கடல்புரத்தில்
கடல்புரத்தில் - வண்ண நிலவன் எழுதியது. முதன் பதிப்பின் முன்னுரையில் 1977ம் வருடம் என்று போட்டு இருக்கிறது. அதனால்அதற்கு முன்பே எழுதியிருக்க வேண்டும்.
எந்த வித சூடான சமாசாரங்களோ, விருவிருப்பிற்கு என்று சேர்த்த விஷயங்களோ இல்லாமல், சாதாரண கத்தோலிக்க கிறிஸ்துவ மீனவ மக்களின் வாழ்க்கையை பதிவு செய்துள்ளார், அவர்களின் பேச்சு மொழியிலேயே! ஆனால் அதுவே படிக்க மிக சுவாரசியமாய் உள்ளது.
செபஸ்தி (செபாஸ்டியனாக இருக்க வேண்டும்) தன்னை படிக்க வைத்து, வேலைக்கு அனுப்பிய தந்தையின் முகத்தை ஏறிட்டுப் பார்க்காமல், மீனவ வாழ்க்கைக்கு முற்று புள்ளி வைத்துவிட்டு, வாத்தியார் வேலைப் பார்க்கும் தன்னுடன் வந்துவிடுமாறு தங்கையை, தாயையும் அழைப்பதுடன் கதைதொடங்குகிறது.
பல தலைமுறையாய் தொடரும் மீனவ வாழ்க்கை. கடலும், மணல்பரப்பும், மீன் பிடிப்பு, மீன் கருவாட்டு வாசம் இதைவிட்டு ஒரு மீனவனால் எப்படி முடியும்? கடல் அவன் ரத்தத்துடன் கலந்தது அல்லவா? குழந்தை பிறந்ததும் தாய்பாலுக்கு முன்பு, கரிக்கும் கடல் நீரை அல்லவா
விட்டு வளர்த்தார்கள்!
செபஸ்தியின் தங்கை பிலோமி, கதையின் நாயகி. அவளுக்கு சாமிதாஸ் மீதான காதல், எல்லை மீறினாலும், கைக்கூடவில்லை. அதையும் யதார்த்தமாய் ஏற்றுக் கொள்கிறாள். அவள் அண்ணனுக்கும் தோழி ரஞ்சியின் காதலும் நிறைவேறவில்லை. காரணம் கதையில் சொல்லப்படவில்லை. பிலோமியின் தாய்க்கு வாத்தியுடனான நட்பு எப்படிபட்டது என்பதை கதையில் பூடகமாய் சொல்லப்படுகிறது. குடி போதையில் தடுக்கிவிழுந்து தாய் உயிரிழக்க, வாத்தியுடன் பிலோமிக்கு நட்பு ஏற்படுகிறது. கதையின் இறுதியில் நாளை பிலோமி வாத்தி வீட்டுக்கே போய்விட போகிறாள் என்ற வரிகள், இருவருக்குமான உறவு எப்படிப்பட்டது என்பதை முடிவெடுப்பது வாசகரின் ஊகத்திற்கே எழுத்தாளர் விட்டுவிடுகிறார்.
இப்படி பல முரண்பாடுகளை ஊர் சும்மா பேசி விட்டு விடுகிறது. ஆனால் அங்கும் பொருளாதாரமே எல்லாம் என்பதை எழுத்தாளர் மிக நுட்பமாய் கதையில் சொல்கிறார். ஓரே சாதி என்றாலும், பிலோமி, சாமிதாஸ் காதல் நிறைவேறாமல் போவதற்கு காரணம் பிலோமி
வல்லம் வலிப்பவனின் மகள். சாமிதாஸ், லாஞ்சு முதலாளி. எல்லாவற்றையும் பொறுத்து போகும் மக்கள், வயிற்றில் அடிப்படும்பொழுது வெகுண்டு எழுகிறார்கள். துடுப்பு போடும் வல்லங்களை பின்னுக்கு தள்ளி லாஞ்சுகள் மீன்களை அள்ளி வருகின்றன. அதில் ஏற்படும் பகை கதை நெடுக வருகிறது.
நாவலின் நாயகி பிலோமி என்றாலும், கடலோசையே மாந்தர்களின் உணர்வுகளை சொல்கிறது. கடலும், அலை ஓசைகளும், மணற்பரப்பும், தென்னை மரங்களும், நீர் பறவைகளும், பரதவ குடியிருப்புகளும், பண்டியல் என்கிற கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களும், கதாப்பாத்திரங்களும் ஒரு திரைப்படம் பார்த்த உணர்வை தருகிறது "கடல்புரத்தில்"
நாவலை அனுப்பி வைத்த கிழக்கு பதிப்பகத்துக்கு நன்றி.
Labels: புத்தக வாசம்
7 பின்னூட்டங்கள்:
புத்தகம் கிடைத்து சரியாய் மூன்று வாரங்கள் ஆகின்றன. ஓரே மூச்சில் படித்துவிட்டு, விமர்சனம் எழுதியே ஆக வேண்டும்
என்பதால் மீண்டும் இன்னொரு முறை படிக்க ஆரம்பித்தால், கடல்புரத்தில் விமர்சனம் என்று பதிவுகள் வர ஆரம்பித்தன.
பலருக்கும் இந்நாவல் படிக்க வேண்டிய பட்டியலில் இருந்திருக்கின்றன என்பது தெரிந்து, மெல்ல போடலாம் என்று
எழுதியதை அப்படியே ஏறக்கட்டிவிட்டேன்.
பிறகு மீண்டும் இன்னொரு முறை படித்து இதோ விமர்சனம் :-)
எட்டு நூறு இருக்கா?
விமர்சனம் என்று கதையை எழுத வேண்டுமா ? முடிவைக்கூட ? ஐந்தாவது பாரத்தை நன்றாக வெட்டுங்கள்...மற்றபடி எல்லாம் சரி!
Congrads...
வண்ண நிலவனோட எல்லா கதையுமே நல்லா இருக்கும்
வண்ண நிலவனோட எல்லா கதையுமே நல்லா இருக்கும்
//வாசகரின் உகத்துக்கே எழுத்தாளர் விட்டுவிடுகிறார்.
//
ஊகத்துக்கே (கொத்ஸ் வரதுக்கு முன்னாடி மாத்திடுங்க) :))
இன்னும் கொஞ்சம் விரிவா காரசாசாரமா விமர்சனம் இருந்து இருக்கலாம், முந்தின பதிவு மாதிரி. (இப்ப தான் பார்த்தேன்) :))
துளசி சூப் :-) (ஹிந்தி)
ரவியா, விமர்சனம் என்ற பெயரில் எழுதியது முதல் முறை. படித்துவிட்டு எழுதியே ஆக வேண்டும் என்பது உதறலாவே இருந்தது. வார்த்தை 800 இருக்க வேண்டும் என்பது ரூல். இங்கிட்டு தட்டு தடுமாறி இருநூத்தி சொச்சம் இழுத்து இருக்கேன். கொடுத்த
புக்கை, பத்ரி பிடிக்கிப்பாரோன்னு பயந்துக்கிட்டு இருக்கேன், இதுல கட் பண்ண வேற சொல்றீங்க :-)
சங்கர் ராம், கம்பா நதி, ரெயீன்ஸ் ஐயர் தெரு இரண்டும் என்னிடம் இருக்கு. வேற என்ன எழுதியிருக்கார் என்று தெரியவில்லை.
அம்பி, இதோ திருத்திவிடுகிறேன். மற்றப்படி காரம் எல்லாம் தன்னால வரணும் :-)
Post a Comment
<< இல்லம்