Saturday, January 03, 2009

பெருமாளே! பெருமாளே!




''இங்க இருந்த பெருமாள் படம் எங்க போச்சு" என்று அலுவலகத்தில் இருந்து வந்தவுடன், ஆருயிர் கணவன் கேட்டதும் எந்த படம் என்றுப் பார்த்தால், போன வருட தினத்தாள் கிழிக்கும் காலண்டரில் அருள்பாலித்துக் கொண்டிருந்தவர்.

அது எதுக்கு? புதுசுதான் மாட்டியிருக்கேனே? இதுலையும்தான் சாமி படம் இருக்கு என்றேன். அதில் இருந்தது, கலர்புல் வெங்கடாஜலபதி மட்டும். இதிலோ சகட்டு மேனிக்கு, லஷ்மி, புள்ளையார், வெங்கடாசலபதி, அருணாசலம், அவுங்க ஓய்ப்புக்கு சின்ன சின்னதாய் நாலைந்து. படங்களும் கொஞ்சம் கலக்கலாய், மொத்தமாய் இருந்ததை அப்பொழுதுதான் பார்த்தேன்.

நல்லா வெளிச்சம் வரும் இடம். படமும் நல்லா பளிச்சின்னு இருக்கும். அதை தூக்கி குப்பையில போட்டுட்டீயே! பர்த்தாவின் செண்டிமெண்ட்ஸ்க்கு மரியாதை குடுத்தா தானே என்று ஓரே புலம்பல். தோடா செண்டிமெண்ட்ஸ் எனக்கும்தான் இருக்கு, அதுக்கு எனக்கு என்னிக்கு மரியாதை கிடச்சிருக்கு என்று கேட்க நினைத்து, போனா போவுது பாவம். சொல்லிக்க்காட்ட இது சந்தர்ப்பம் இல்லை என்று வாயை மூடிக் கொண்ட்டேன். வேற ஒரு நாள் சான்சா கிடைக்காது :-)

புலம்பலின் வீரியத்தைத் தாங்காமல், '' உங்களுக்கு அந்த இடத்தில் பெருமாள் இருக்கணும் அவ்வளவு தானே?" என்று ஒரு போடு போட்டதும் அமைதியடைந்தார்.

நமக்கா ஐடியாவுக்கு பஞ்சம் என்று பஞ்சாபி சூட்டின், நேரு காலரை தூக்கி விட்டுக் கொண்டவுடன், பழைய பேப்பருக்கு போட வைத்திருந்த 2008 கல்கி தீபாவளி மலர்
நினைவுக்கு வந்தது.

முன்பெல்லாம் கலர் கலராய் சாமி படங்களாய் இருக்கும். ஏதாவது தேறாதா என்று சொன்னதும், நூறு ரூபாய் கொடுத்து, வாங்கி படித்தது நீ. அதுல என்ன படம்
வந்திருக்கு என்றுப் பார்க்கவில்லையா என்றுக் கேட்டதும், காரணம் சொன்ன பிரச்சனை வரும் என்றேன். இதெல்லாம் புதுசா என்ற பார்வையைப் பார்த்ததும், ''தீபாவளி மலர்ன்னா நாலைந்து சாமியார், மடாதிபதிகள் படம், மக்களுக்கு சொல்லும் அருள்வாக்கும் எப்போதும் இருக்கும். கல்கின்னா அவங்க ஆஸ்தான, காஞ்சி மடாதிபதிகள் படம் இருக்கும். இருள் நீக்கியார், அவுரூ சிஷ்யன் படம் இருக்கான்னு பார்க்கத்தான் தீபாவளி மலரே வாங்கினேன்" ஒரு மாதிரி, இன்ன உணர்ச்சி என்றுக்காட்டாத பார்வைப் பார்த்தார்.

அதற்குள் நானும் தீபாவளி மலரை எடுத்துப் புரட்ட ஆரம்பித்தேன். இரண்டு பெருமாள் படங்கள் கிடைத்தன. இரண்டையும் சீராய் வெட்டி, புது காலண்டரில் வைத்துக் காட்டினேன். ''திருப்பதி வெங்கடாசலபதி இல்லையா" என்றதும், ''நாமம் போட்ட பெருமாள். எல்லாம் ஒண்ணுதான். இது ரெண்டுல ஒண்ணு செலக்ட் பண்ணுங்க"" என்றேன்.

''உற்சவ மூர்த்தி புகைப்படம் நல்லா இருக்கு'' என்றார். ஆனால் அது சைசு சின்னது. கலர் ஓவியமாய் சுந்தரராஜ பெருமாள், மூலாஸ்தான படம்தான் சரியாய் இருக்கும் என்றேன். அரைகுறையாய் தலையை ஆட்டினார்.

ஸ்ரீதேவி, பூ தேவி சமேத பெருமாள் நன்றாக சூட் ஆனார். வெட்டி, ஒட்டி வைத்ததும், நல்லா இருக்கா என்றுக் கேட்டதும், லேசாய் தலையசைத்துவிட்டு, " அப்புறம், தீபாவளி மலர்ல அவங்க படம், அருளுரை எல்லாம் இருந்ததா இல்லையா?" என்றார்.

"இருக்கு, ஆனா மறைந்த பெரியவரின் படமும், அருள்வாக்கு மட்டும் இருக்கு. மத்த ரெண்டு பேரூம் காணலை'' என்று சொல்லிவிட்டு ஆப் தி ரெகார்ட்டா மேற்கொண்டு பேச ஆரம்பித்ததும், '' ஆனாலும் உனக்கு வம்பு ஜாஸ்தி. இதுக்காக புக்கு வாங்குவாங்களா என்ன?" என்றதும், ''அடடா, இப்ப கதையைக் கேட்டது யாரூ?'' என்றேன்.

சாப்பாட்டு மேஜையின் மீது இருந்த, மிச்ச மீதி பக்கங்கள், வெட்டிய தாள் தூகள்களை வாரி குப்பைக்கூடையில் கொட்டிவிட்டு, பிசின், கத்திரிக்கோல் எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு, சாப்பாட்டு கடையை ஆரம்பித்தால், ''அந்த உற்சவ மூர்த்தி படம் எங்கே?" என்றதும், எனக்கு புரையேறிவிட்டது.

தண்ணீர் குடித்துவிட்டு, மேற்கொண்டு கொஞ்சம் அதீதமாய் ஷோ காட்டிவிட்டு, கம்மிய குரலில் '' அங்க'' என்று புக் செல்ப் இருக்கும் இடத்தை கையில் காட்டிவிட்டு, மீண்டும் இருமினேன். நல்லவேளை அதற்குள் தட்டு காலியாகியிருந்தது. ஆள் ஆளுக்கு தண்ணீர் எடுத்துக் கொடுக்க, இன்னும் கொஞ்சம் இருமிவிட்டு, பேச்சை மாற்றினேன்.

இதெல்லாம் பொய் சொல்லுதல், ஏமாற்றுதல் கிடையாது. என்ன செய்ய, தாம்பத்திய சாகரத்தில் வெற்றிக்கரமாய் நீச்சல் அடிக்க, சில சமயங்களில் இப்படி உண்மையை மறைக்க வேண்டியுள்ளது.

23 பின்னூட்டங்கள்:

At Saturday, 03 January, 2009, சொல்வது...

ம்ம்ம்ம்???? புரியலை, என்ன சொல்றீங்கனு! போகட்டும், புத்தாண்டு வாழ்த்துகள் தாமதமாய். இனிய புத்தாண்டிற்கும், இந்தப்புத்தாண்டில் நிறைய அவார்டுகள் வாங்கவும் வாழ்த்துகள்.

 
At Saturday, 03 January, 2009, சொல்வது...

வாழ்த்துக்கள் அண்ணி!

பின்னே என்ன திருவிழந்தூர்காரரை(வீர வைஷ்ணவரை) போய் சகல சாமியையும் கொண்ட குடும்ப சகித காலண்டரை காட்டி ஏமாத்த பார்த்தா விட்டுடுவாரா? அதிலயும் அந்த சேம் உற்சவமூர்த்திதான் வேணும்ன்னு அடம் புடுச்சார் பாருங்க அங்க தான் நிக்கிறார் எங்க ஊர்க்காரர். பிடிச்சா அதே பிடியிலே நிப்போம்ல:-))

 
At Saturday, 03 January, 2009, சொல்வது...

ஆக.... உற்வசர்... தெப்போற்சவம் போகாம... குப்பத்தொட்டோற்சவத்துக்குப் போயிட்டாரா............

 
At Saturday, 03 January, 2009, சொல்வது...

கீதா, தொல்ஸ் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

கீதா, ஜிரா சொன்னதைப் படிங்க, புரியும் :-)

அபிஅப்பா, இந்த மாயவரத்துக்காரர்களுக்கே தாங்கள் அதி சமார்த்திய/ புத்திசாலிகள் என்ற நினைப்பு. இதுல காவேரி தண்ணி
குடிச்சி வளரந்தவனாக்கும் என்ற டயலாக் வேற :-)))))))))))

ஜி.ரா! ஆஹா உனக்காவது புரிந்ததே! ஆமாம் எங்க போனே? நோ சீ :-)

 
At Saturday, 03 January, 2009, சொல்வது...

ஹிஹிஹி, நான் கொஞ்சம் கு.வி. அதான் புரியலை, இப்போப் புரிஞ்சது! நன்னியோ நன்னி! :))))))))

 
At Saturday, 03 January, 2009, சொல்வது...

//இதெல்லாம் பொய் சொல்லுதல், ஏமாற்றுதல் கிடையாது. என்ன செய்ய, தாம்பத்திய சாகரத்தில் வெற்றிக்கரமாய் நீச்சல் அடிக்க, சில சமயங்களில் இப்படி உண்மையை மறைக்க வேண்டியுள்ளது.//

அதே..அதே.

 
At Saturday, 03 January, 2009, சொல்வது...

// ramachandranusha(உஷா) said...
ஜி.ரா! ஆஹா உனக்காவது புரிந்ததே! ஆமாம் எங்க போனே? நோ சீ :-) //

ஹி ஹி இதெல்லாம் தெளிவாப் புரியும். புரியுற மாதிரிதானே எழுதீருக்கீங்க. அதுவுமில்லாம இதே மாதிரி ஒரு நிகழ்ச்சி எனக்கும் நடந்தது. ஒரு நண்பருக்கு சாமிப் பாட்டுன்னா பிடிக்கும்னு முருகன், பெருமாள்னு கதம்பமா சிடிகள் வாங்கிக் குடுத்தேன். ஏரோப்பிளேன்ல கொண்டு போகனுமேன்னு... கவரெல்லாம் எடுத்துட்டு சிடி பேக்ல எடுத்துக்கிட்டாரு. இருங்க பேப்பரெல்லாம் குப்பத்தொட்டீல போட்டுர்ரேன்னு சொன்னேன். அவருக்கு ஒரு மாதிரி ஆயிருச்சு. எங்க எடுத்துப் போட்டிருவேனோன்னு.. அதெல்லாம் எடுத்துச் சுருட்டி.. ஒரு பேப்பர்ல போட்டு இன்னும் சிறுசாச் சுத்தி ரப்பர் பேண்ட் போட்டு எடுத்துட்டுப் போனாரு. உங்க கதையப் படிச்சதும் அதான் நினைவுக்கு வந்தது.

என்னது.. எங்க போனேனா... இருக்கேன். இருக்கேன். என்ன... ரொம்ப வேலை. அவ்ளோதான் மேட்டரு. :)

 
At Saturday, 03 January, 2009, சொல்வது...

கீதா! :-)

பாசமலர்! பாம்பின் கால் பாம்பரியும் :-)

ஜிரா! மெயில் வருது பாரு

 
At Saturday, 03 January, 2009, சொல்வது...

// ''அந்த உற்சவ மூர்த்தி படம் எங்கே?" என்றதும், எனக்கு புரையேறிவிட்டது.

தண்ணீர் குடித்துவிட்டு, மேற்கொண்டு கொஞ்சம் அதீதமாய் ஷோ காட்டிவிட்டு, கம்மிய குரலில் '' அங்க'' என்று புக் செல்ப் இருக்கும் இடத்தை கையில் காட்டிவிட்டு, மீண்டும் இருமினேன். //

பொய்மையும் வாய்மையிடத்த " புரை " தீர்ந்த நன்மை பயக்குமெனின். அந்த புரை இது தானா? :)

உற்சவ மூர்த்தி ஊர் சுற்றி செல்ல வேண்டும் என்று நினைத்து விட்டீர்கள் சரி! ஆனாலும் எல்லா பெருமாளுக்கும் இவ்வளவு சீக்கிரம் குப்(ட்)பையா ? :)

 
At Saturday, 03 January, 2009, சொல்வது...

வந்தியதேவன், என்ன செய்ய, கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது ;-)

 
At Saturday, 03 January, 2009, சொல்வது...

புத்தாண்டு வாழ்த்துகள் !!
வைகுண்ட ஏகாதசி சமயம் என்பதற்காக ‘பெருமாளே!' பதிவா ? :)
பெருமாளேஏ..(இந்த தொனி எப்படி எழுத்தில் வடிப்பது?)
இயல்பான Tom & Jerry இல்வாழ்க்கையை அழகாக படம் பிடித்துள்ளீர்கள்.

 
At Sunday, 04 January, 2009, சொல்வது...

மணியன் சார், புத்தாண்டு வாழ்த்துக்கள். புத்தாண்டில் முதல் பதிவு. சிம்பாலிக்காய் நாமம் படம்:-)

 
At Sunday, 04 January, 2009, சொல்வது...

// இந்த மாயவரத்துக்காரர்களுக்கே தாங்கள் அதி சமார்த்திய/ புத்திசாலிகள் என்ற நினைப்பு.//

நன்றி சொல்ல உமக்கு...!

வார்த்தையில்ல எமக்கு !


:)))))

 
At Sunday, 04 January, 2009, சொல்வது...

ஆயில், என்னடா பொதுவுல உண்மையைப் போட்டு உடைக்கிறோமேன்னு கொஞ்சம் பயமாத்தான் இருந்தது :-))))))))))))

 
At Sunday, 04 January, 2009, சொல்வது...

ஆயில், என்னடா பொதுவுல உண்மையைப் போட்டு உடைக்கிறோமேன்னு கொஞ்சம் பயமாத்தான் இருந்தது :-))))))))))))

 
At Sunday, 04 January, 2009, சொல்வது...

// வந்தியதேவன், என்ன செய்ய, கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது ;-)
//

"பேப்பரை மட்டும் பார்த்தால் பெருமாள் தெரியாது" என்றல்லவா சொல்லி இருக்க வேண்டும் நீங்கள் ? ;)

 
At Sunday, 04 January, 2009, சொல்வது...

ramachandranusha(உஷா) said...

ஆயில், என்னடா பொதுவுல உண்மையைப் போட்டு உடைக்கிறோமேன்னு கொஞ்சம் பயமாத்தான் இருந்தது :-))))))))))))//


ஒரு ஸந்தேகம்......!

எங்களை வைச்சு ஒண்ணும் காமெடி கீமெடி பண்ணலயே :)))))

 
At Tuesday, 06 January, 2009, சொல்வது...

//போனா போவுது பாவம். சொல்லிக்க்காட்ட இது சந்தர்ப்பம் இல்லை//

அதானே, எப்போ, எங்க, எப்படி அடிக்கனும்?னு சும்மா ஸ்கெட்ச் போட்டு இல்ல அடிப்போம்? :p

இப்படிக்கு
அடிபட்டு கொண்டிருக்கும்
ஒரு ரங்கு

உங்க கணவர் மானேஜரா? ஏன் கேக்கறேன்னா நீங்க அமிர்தமே கடைஞ்சு எடுத்து குடுத்தாலும் எனக்கு நான் நினைச்சது தான் வேணும்!னு சொல்வாங்க இந்த மேனேஜர்கள். :))

 
At Tuesday, 06 January, 2009, சொல்வது...

எல்லா பெருமாளும் ஒன்னு கிடையாது, இருங்க, கேஆரெஸ்ஸ வந்து சாமியாட சொல்றேன். :))

 
At Tuesday, 06 January, 2009, சொல்வது...

புத்தாண்டு வாழ்த்துக்கள் உஷா.

 
At Tuesday, 06 January, 2009, சொல்வது...

நாமம் போட்டு விட்டீங்களா ??
அடச்சே பாவம்பா.
இங்க ஒண்ணு எல்லாப் படத்தையும் ,சுவருக்கு வண்ணம் அடிக்கறேன் பேர்வழின்னு பாக் செய்தே வைத்து விட்டது.:)

 
At Tuesday, 06 January, 2009, சொல்வது...

எங்களை வைச்சு ஒண்ணும் காமெடி கீமெடி பண்ணலயே :)))))//

ஆயில்! சே சே :-)

அம்பி, எப்படி கண்டுப்பிடிச்சே? ஒரு தபா, ஏதோ வேலை சொல்ல, நான் அதில் இருக்கும்
பிரச்சனைகளை சொல்லிக்கிட்டு வர, மனுஷன் என்ன சொன்னார் தெரியுமா? இதே ஆபிஸ்னா,
நா சொன்னா மறு பேச்சு சொல்லாமா என் சிஷ்யர்கள் டன்ன்னு செஞ்சி முடிப்பாங்க என்றார்.
அடபாவி மனுஷா, உன் கீழே இருக்கிற டென்சீகன், சூபரவைசர், இன்ஜினியர்கள் லிஸ்டும்,
நானும் ஒண்ணா என்று நொந்துப் போனேன்.ஆனா அன்னில இருந்து, நான் கண்டுபிடித்த உத்தி,
இவரு சிஷ்ய பசங்க மாதிரி, முடியாதுன்னு வார்த்தையில, சொல்லாம சைலண்டா செய்யாம
இருந்துவிடுகிறது :-)

வல்லி, நீங்கத்தான் புகைப்பட வித்தகி ஆச்சே! உங்க பிளாக்குல சாமி படங்களா போட்டுக்கிட்டு அதையே கும்பிடுங்க.

நன்றி கிருஷ்ணன். உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

 
At Friday, 09 January, 2009, சொல்வது...

நாமம் சூடுவதே அதற்குத் தானே, இல்லியா:-) தினப்படி மண்டகப்படி:-)

பின்னூட்டங்கள்ல மக்கள் கிளப்பறாங்கப்பா: "புரை தீர்ந்த நன்மை", "Tom & Jerry இல்வாழ்க்கையை"... எல்லாமே சூப்பர்.

 

Post a Comment

<< இல்லம்