Thursday, February 12, 2009

சாபம்- பெண் எழுத்தாளர்கள் சிறுகதைப் போட்டி 2008யில் பரிசு பெற்ற சிறுகதை

அது காட்டின் ஆரம்பப்பகுதி. தவ முனிவர்களின் இருப்பிடம் ஒருபக்கமும், மற்றொரு பக்கம் வேடர்களின் குடியிருப்பும் தென்படுகின்றன. நடுப்பகல் வேளைதான், ஆனால் மழை மேகங்கங்கள் சூழத் தொடங்கியதால் , இருள் பரவத் தொடங்குகிறது. ஒங்கி வளர்ந்த விருட்சங்கள் பேயாட்டம் போடுகின்றன. காற்றும், மின்னலும், இடியுமாய் எங்கும் போரோசை. எல்லோரும் தங்கள் கால்நடைகளை அவசரமாய் ஓட்டிவருகிறார்கள். சில பெண்கள் விளையாடிக் கொண்டு இருந்த பிள்ளைகளை வீட்டினுள் வருமாறு உரக்க அழைக்கிறார்கள்.

அந்தப்பெண் தன் பிள்ளைகளைத் தேடியவாறு வருகிறாள். அவளின் உடை எளிமையாக இருந்தாலும், முகக் களை, அவள் சாதாரணமானவள் அல்ல என்கிறது. தன் பிள்ளைகளின் பெயர்களைக் கூவியவாறு பார்த்தவர்களை எல்லாம் விசாரிக்கிறாள். மற்றவர்களும் அவளுடன் சேர்ந்து தேடத் தொடங்குகின்றனர்.

மரத்தடியில் உட்கார்ந்திருந்த கிழவி ஒருத்தி, தலையை ஆட்டிக்கொண்டு '' நிமித்தங்கள் சரியில்லை. பிரளயம், பிரளயம் வரப்போகிறது'' என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டு இருந்தாள்.

எதிரில் ஒருவன் தலை தெறிக்க ஓடிவருகிறான்.

"தாயே! காட்டின் வெளி சாலையில் படைகள் போய்க் கொண்டு இருக்கின்றன. ஏதோ யாகமாம், மிக அழகான குதிரையும் இருந்தது. அதை உன் பிள்ளைகள் பிடித்துக் கட்டிப் போட்டுவிட்டார்கள். குழந்தைகளாயிற்றே என்று வீரர்கள் நல்ல வார்த்தையில் விட சொல்லியும் விடவில்லை. கையில் வில்லும் அம்பும் வேறு வைத்திருந்தார்களா, அவர்களை சண்டைக்கு அழைத்துக் கொண்டு இருக்கிறார்கள்"

"தெய்வமே!" என்று புலம்பியபடி அவள் அவன் காட்டிய திசையில் விரைகிறாள்.
அங்கு அவள் கண்ட காட்சி அவளைத் திகைப்புறச் செய்கிறது. பார் புகழும் வீரர்கள் என்று போற்றப்பட்டவர்கள், கட்டுண்டும், அடிபட்டும், நினைவிழந்தும் கிடப்பதைப் பார்த்துத் திகைக்கிறாள்.

சூரியக் குஞ்சுகளாய் அவளுடைய பன்னிரெண்டு வயது சிறுவர்கள் அம்பெய்த குறி பார்த்து நிற்பதையும் அவள் கண்கள் கவனித்தன. அவர்கள் யாரை குறி பார்க்கிறார்கள் என்பதைக் கண்டவுடன், அவளை அறியாமல் தீனக்குரல் எழுப்புகிறது.

அவள் குரலைக் கேட்டவுடன், அவள் பிள்ளைகள் கன்றுக் குட்டிகளாய் ஓடிவந்து அவளை அணைத்துக் கொள்கின்றனர்.

தன்னை சமாளித்துக்கொண்டவள், வில்லேந்தி நிற்பவரிடம் அவர்களை அழைத்துச் செல்கிறாள். கண்ணில் பொங்கும் நீருடன், அந்நாட்டு வேந்தன், அவர்களுடைய தந்தை என்றும் அறிமுகப் படுத்துகிறாள். குழந்தைகள் ஆச்சரிய உவகையுடன் அவரை வணங்குகின்றனர். அவரும் அவர்களை ஆசிர்வதித்து கட்டியணைத்து முத்தமிடுகிறார்.

''எங்கள் தந்தை என்றால் , இவ்வளவு நாட்கள் எங்களை விட்டு ஏன் பிரிந்து இருந்தீர்கள்?"

அவரின் மெளனத்தைப் பார்த்து, '' அவ்வளவு சுலபமாய் இக்கேள்விக்கு பதில் கிடைக்காது குழந்தைகளே!" என்றவள், ஒரு முடிவுக்கு வந்ததைப் போல் அவள் முகம் கடுமையாய் மாறியது. " உங்கள் குழந்தைகள், ரகு குலத்தின் வாரிசுகள். உங்களிடமே ஒப்படைக்க இவ்வளவு வருடங்கள் காத்திருந்தேன். என் கடமை முடிந்தது. நான் வருகிறேன்" என்றாள்.
சிறுவர்கள் புரியாமல், தாயின் கையைப் பிடித்தனர். கைகளை விலக்கியவள், "எனக்கு விடை கொடுங்கள்" என்றாள்.

அவர் அவளைச் சமாதானப்படுத்த ஏதோ சொல்ல முற்படுகிறார். அவள் சீற்றத்துடன் நன்றாக நிமிர்ந்து அவர் முகத்தைப் பார்க்கிறாள். அவள் பார்வையைச் சந்திக்க முடியாமல் அவர் தலை குனிகிறது .பல வருடங்களுக்கு முன், மேன்மாடத்திலிருந்து முதன்முறையாக பார்த்த பார்வைக்கும் இதற்கும் உள்ள வித்தியாசத்தை நினைத்து அவள் மனம் கசந்து போகிறது.

வீரர்கள், கர்மயோகிகள், அறிஞர்கள் என்று தன்னை வணங்கி நிற்கும் கூட்டத்தைச் சுற்றி நன்கு பார்க்கிறாள்.

"அறிவிலும், பண்பிலும், நீதியிலும் சிறந்தவர்களே! மன்னவனே ஆனாலும் அவன் தன்மனைவிக்கு இழைத்த அநீதியை ஏன் யாரும் சுட்டிக் காட்டவில்லை" என்று மெல்ல நிதானமாய்த் தன் கேள்வியை ஆரம்பிக்கிறாள்.

கூட்டம் வாயடைத்து நிற்கிறது.

'அரக்கன் என்னைச் சிறைப்பிடித்தது என் குற்றமா? அவன் நிழலைக்கூட கண்ணால் காணவில்லை. மாற்றன் இல்லத்தில் இருந்தேன் என்ற யாரும் சொல்லிவிடக் கூடாதே என்று தானே அன்றே, அக்னி பிரவேசம் செய்து, நான் மாசற்றவள் என்று நீரூபித்து விட்டு தானே அங்கிருந்து கிளம்பினேன்? அன்று என் செயலை இவர் வேண்டாம் என்று தடுக்கவில்லையே! பார்த்துக் கொண்டுதானே நின்றிருந்தார். ஆனால் திரும்ப யாரோ என்னவோ சொன்னார்களாம், கர்ப்பிணி மனைவியைக் காட்டுக்கு அனுப்பிட்டார். இதையே ஒரு குடிமகன் செய்து இருந்தால், குற்றமாகியிருக்கும்''

''சென்றவை சென்றவையாக இருக்கட்டும். குழந்தைகளுடன் அரண்மனைக்குத் திரும்பிவிடுங்கள்" காலில் விழுந்து மன்றாடும் மைத்துனனைப் பார்க்கிறாள் அவள்.

''நீ அழைத்து புண்ணியமில்லை" என்றவள், சிறிது யோசித்துவிட்டு, ஒரு பெருமூச்சுடன் '' பழைய நினைவு. நாங்கள் உன் தாயின் விருப்பப்படி வனவாசம் சென்றது உனக்குத் தெரியாது. பிறகு விஷயம் அறிந்து, எங்களைத் தேடி வந்தாய். தந்தை சொற்படி நீயே நாட்டை ஆள வேண்டும் என்றுச் சொல்லி நீதி வழுவாமல் ஆட்சி செய்வது பற்றி விளக்கம் சொன்னார். மனிதன் செய்யக்கூடாதவைகளை எடுத்துச் சொன்னார். அதில் ஒன்று. புறம் பேசுதல். அடுத்தவர்களைச் சொற்களால் அடிக்கக்கூடாது. புரணி பேசும் மனிதர்கள் சகவாசம் கூடாது. யாராவது அடுத்தவர்களைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாச் சொல்லும்போது, சுவாரசியமாய் இருக்கிறதே என்று அதையெல்லாம் காது கொடுத்துக் கேட்பதும் பாவத்தில் ஒன்று என்றெல்லாம் நீதி போதனை செய்ததை, அருகில் இருந்த நானும் கேட்டுக் கொண்டு இருந்தேன்"

''ஆம் தாயே! ஆனால் மன்னவன் என்பவன் தன் குடிகளுக்கு எடுத்துக்காட்டாய் இருக்க வேண்டும். மாற்றான் வீட்டில் இருந்துவிட்டு வந்ததை, தங்களுக்கு சாதகமாய் பிற பெண்களும் எடுத்துக் கொள்ளலாம் என்ற குடிமக்களின் பயம். யதா ராஜா, ததா ப்ரஜா. அதனாலேயே..." அவர் முடிக்கும் முன்பு, " அப்படியா? அதே குடிமக்களின் ஒருவர் கூட, நிறை மாத கர்ப்பிணியைக் காட்டுக்கு அனுப்பியது தவறு என்று பேசவில்லையா? அல்லது பேசியதை இவர் காதில் யாரும் போடவில்லையா?" சொல்லிவிட்டு, அவள் சிரிக்கத் தொடங்குகிறாள்.

அமைதியும், அடக்கமும் நிரம்பியவள் என்று நினைத்திருந்த மனைவியின், புதிய ஆக்ரோஷ முகம், அவனுக்கு பயத்தை அளிக்கிறது.

'' தெரிந்தே மாற்றானுடன் உறவுக் கொண்டவளுக்கு, கணவனால் கல்லாய் சபிக்கப்பட்டவளுக்கு இவர் சாபவிமோசனமும் தந்து, பதிவிரதை பெண்களில் முதல் ஸ்தானமும் தர வைத்துள்ளார். அவளிடம் காட்டிய பச்சாதாபத்தில், ஒரு சிறு அணுஅளவும், எந்த பாவமும் அறியாத மனைவிடம் ஏன் இவருக்கு வரவில்லை? காரணம் என்ன தெரியுமா?" நிறுத்தியவள், எல்லாரையும் பார்க்கிறாள்.

''இவருக்கே மனைவி மீது நம்பிக்கையில்லை"

' காதில் விழுந்ததை ஜீரணிக்க இயலாமல் மெல்லியதாய் சில குரல்கள் வேதனையை வெளிப்படுத்துகின்றன.

''போதும் தாயே போதும்! ஐயனே இன்னும் என்ன தாமதம்? குழந்தைகளையும், அன்னையையும் அழைத்துக் கொண்டு நாடு திரும்பலாமே!" பணிவுடன் வேண்டி நிற்பவனைப் பார்த்து, ''அப்படியென்றால் தன் புனித தன்மையை நிரூபிக்க சத்திய பிராமணம் செய்யட்டும்'' சொல்லியவரின் குரலில் ஒரு தடுமாற்றம்.

இன்னும் என்ன என்பதுப் போல கூட்டம் பேச்சற்று நிற்கிறது.

'' சத்திய பிராமணமா? " அவள் சிரிக்க தொடங்குகிறாள். அவள் ஒரு முடிவுக்கு வந்தவளாய், பஞ்சபூதங்களைச் சாட்சிக்கு அழைக்கிறாள்.

ஊழிக்காற்று சுழண்று அடித்து ஊம் ஊம் என்று ஓலமிடுகிறது.

''நான் என் கணவனைத் தவிர சிந்தையாலும் பிற ஆடவனை நினைத்ததில்லை. நான் சொல்வது சத்தியம் என்றால், பூமித் தாயே என்னை ஏற்றுக் கொள்! போதும், போதும்! நானும் பெண் என்று இந்த பூமிக்கு பாரமாய் வாழ்ந்தது!" என்று அலறுகிறாள்

வானமும், பூமியும் நடுங்குகிறது. மின்னல் மின்னி அவளுக்கு எதிரில் இருந்த பச்சைமரம் பற்றி எரிகிறது. அதை ஒட்டி பேரிடி விழுந்து பூமியை பிளக்கிறது.

"அன்பு, பண்பு, சத்தியம், நேர்மை, கடமை என்று உலகிற்கே உதாரண புருஷன் என்று உம்மை கொண்டாடுகிறார்களே, உமக்கு அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால், இக்குணங்களுக்கு நேர்மாறாய் திருடனாய், பொய்பேசுபவனாய், பல பெண்களை மணப்பவனாய் பிறப்பீராக!" என்று சாபமிடுகிறாள்

பிறர் தடுக்கும் முன் அவள் ஓடிச் சென்று அக்குழியில் குதிக்கிறாள். எரியும் மரம் அப்படியே சரிந்து விழுந்து அக் குழியை மூடுகிறது.


*******************

Labels:

23 பின்னூட்டங்கள்:

At Thursday, 12 February, 2009, சொல்வது...

This comment has been removed by the author.

 
At Friday, 13 February, 2009, சொல்வது...

மிகவும் அருமையான சிறுகதை. படிக்கத் தொடங்கும்போதே 'அட இது இராமாயணச் சாயலாக இருக்கிறதே' என நினைத்தேன், அதுபோலவே கதையும் சென்றது. கதையின் கதாநாயகி அடிமைப் பெண்ணாக இருந்துவிட்டாளே என்றுதான் எனக்கு இன்னமும் வருத்தம் மேலிடும். யாரின் கற்பை யாரிடம் நிரூபிக்க வேண்டும்?! சாபம் விடுவதல்ல பெண்ணிற்கு அழகு, சாதித்துக் காட்டுதல்தான் பெண்ணிற்கு அழகு, எவருக்கும் அழகு.

வால்மீகி தான் தவறு செய்த காரணத்தினாலாயே, தான் திருந்தியதாக நினைத்துக் கொண்டு எழுதிய இராமாயணத்தை தப்புத் தப்பாக எழுதிவிட்டார் என்றுதான் எனக்கு எப்போதுமே நினைக்கத் தோன்றும்.

சாபம் விட்டதைப் போல் காண்பித்ததால் இன்றைய சராசரி மக்களின் எண்ணங்களைப் பிரதிபலித்தது இந்த சிறுகதை.

மிக்க நன்றி சகோதரி.

 
At Friday, 13 February, 2009, சொல்வது...

அதென்ன சத்திய பிராமணம்? இப்படி ஒரு வார்த்தை கேட்டதே இல்லையே :-)

உங்கள் கதை மூலம் தெளிவாகும் நீதிகள்:

1. பத்தினி சாபம் பலிக்கும்.
2. எல்லாம் விதித்தபடிதான் நடக்கும்.
3. பெண்கிட்டே மோதாதே!

அதானே சொல்லவந்தீங்க?

 
At Friday, 13 February, 2009, சொல்வது...

ரங்கன், புராணங்கள், இதிகாசங்களை நல்ல கதையாய் பார்க்கும்பொழுது அவைகளின் கதாப்பாத்திரங்களை அலச முடிகிறது. ஆனால் இறைவனாய் பூஜிக்கும்பொழுது, எந்த கேள்வியும் இல்லாமல் ஏற்றுக் கொள்ள முடிகிறது. பெயரை வைத்துக்கொள்வதும், வழிப்படுவதும் அவரவர் நம்பிக்கை சார்ந்த விஷயம்.

வெ.ராதாகிருஷ்ணன் சார்,
ராமன் தடுமாறிய இடங்கள் வாலி வதமும், சீதையிடம் அவன் நடந்துக் கொண்ட விதமும்தான்.
அதற்கென்ன சப்பை கட்டு கட்டும்விதமாய் பலரும் பலவிதமாய் சால்ஜாப் சொல்லுகிறார்கள்.
ஆனால் ஒரு பெண்ணாய் என்னால் இதில் மட்டும் ராமன் கேரக்ட்ரை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
சீதாவை பூமி தாய் ஏற்றுக் கொண்டாள் என்பதையும், கிருஷ்ண அவதாரத்தில் முற்றிலும் ராமனுக்கு
முரணான குணாதிசியங்களும் சொல்லப்பட்டதால், ஒரு கற்பனை புனைவு.

பினாத்தல்,
உத்திர ராமாயணம் கிடைத்தால் வாங்கி படிக்கவும். பிறகு நான் எந்த நீதி போதனையும் என்றும்
கொடுப்பதில்லை :-)

 
At Friday, 13 February, 2009, சொல்வது...

வால்மீகிக்கு சரியான போட்டி நீர்தான்.
நீங்க கொஞ்சம் முன்னப் பிறந்திருக்க கூடாதா? இது "உஷாயாணம்".

 
At Friday, 13 February, 2009, சொல்வது...

அக்கா, அனுபவிச்சு எழுதி இருக்கீங்க போல! :))

 
At Friday, 13 February, 2009, சொல்வது...

யக்கோவ்,

உத்திராங்கறது யாரு? அவங்க ஏன் ராமாயணம் எழுதினாங்கோ? ஒரு வேளை மிஸ் / மிஸஸ் உத்திராவும் பித்தளை பார்ட்டியோ?

ஒரு அவதாரமே பத்தினி சாபத்தால் வந்ததாக கொளுத்தி விடறீங்களே, மேற்படி பித்தளைப் பொண்ணு எழுதின மேட்டர்லே இது உண்டா?

 
At Friday, 13 February, 2009, சொல்வது...

தேனியாரே, உஷாயணமா? வால்மீகி கதை மாதிரியா இருக்கு? ஐயகோ அவரோட ஆவி சண்டைக்கு வருமா?

இலவசம், ஆமாம்.

என்ன கொடுமை பினாத்தல் இது ???

வலைப்பூக்கள் நன்றி

 
At Friday, 13 February, 2009, சொல்வது...

''சீதாவை பூமி தாய் ஏற்றுக் கொண்டாள் என்பதையும், கிருஷ்ண அவதாரத்தில் முற்றிலும் ராமனுக்கு
முரணான குணாதிசியங்களும் சொல்லப்பட்டதால், ஒரு கற்பனை புனைவு.''

மிகவும் நன்றி சகோதரி. கதையின் பிடிப்பில் வாழ்த்துகள் சொல்லத் தவறித்தான் போனேன். சிறுகதை தேர்வானதற்கு வாழ்த்துகள் சகோதரி.

 
At Friday, 13 February, 2009, சொல்வது...

நல்ல எழுதியுள்ளீர்கள்

வாழ்த்துகள்

 
At Saturday, 14 February, 2009, சொல்வது...

அருமை உஷா.. யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் ஆனால் படிக்கும் அனைவருக்கும் உணர்த்தியது அருமை.. கதையை விட கதையின் பின்னால் நீங்கள் சாடியிருக்கும் மேல்ஷாவனிச‌ குறிப்புகள் அற்புதம்.. பரிசு பெற முற்றிலும் தகுதியான கதையே, வாழ்த்துகள் & பாராட்டுகள்..

 
At Saturday, 14 February, 2009, சொல்வது...

இராதாகிருஷ்ணன், திகழ்மிளிர் நன்றி.

பாராட்டுக்கு நன்றி வெண்பூ. ராமாயணத்தில் ராமன், சீதையை
தன் மனைவியாய் சரியாய் நடத்தவில்லை என்ற குறை எனக்கு. தெரிந்தே இந்திரனை அனுமதித்த
அகல்யாவுக்கு மன்னிப்பு தந்து, பதிவிரதைகளில் முதல் இடம் தருகிறான். அப்படிப்பட்ட
கேரக்டர், மனைவி விஷயத்தில் ஏன் மாறாக நடக்க வேண்டும். சீதையின் காரக்டர் மாதிரி பாவப்பட்ட ஜன்மம் வேறு இல்லை. இன்றைய சீரியல் நாயகிக்கு இன்சிப்பிரேஷன் :-) பல குடும்பங்களில் சீதா என்ற பெயரை குழந்தைக்கு வைக்க மாட்டார்கள்.

 
At Sunday, 15 February, 2009, சொல்வது...

வணக்கம்..வழக்கம் போல கதை நடையும்,வித்தியாசமான கோணத்தில் அமைந்த சிந்தனையும் நன்று.

//திருடனாய், பொய்பேசுபவனாய், பல பெண்களை மணப்பவனாய் பிறப்பீராக!" //

1.இதைப் பாத்தா சாபம் மாதிரி தெரியலையே :)
2. இன்றைய தமிழ் அரசியல் தலைவரை வைத்து காமெடி கீமடி பண்ணலியே :)

 
At Sunday, 15 February, 2009, சொல்வது...

சங்கர் நன்றி.

//திருடனாய், பொய்பேசுபவனாய், பல பெண்களை மணப்பவனாய் பிறப்பீராக!" //

1.இதைப் பாத்தா சாபம் மாதிரி தெரியலையே :)
2. இன்றைய தமிழ் அரசியல் தலைவரை வைத்து காமெடி கீமடி பண்ணலியே :)

அதுதானே,ஏதாவது கொளுத்திப் போடாவிட்டால் உங்களுக்கு எல்லாம் சரிப்படாதே :-)

 
At Monday, 16 February, 2009, சொல்வது...

நான் சொல்ல நினைத்ததை சங்கர் சொல்லிட்டார்.
மழுப்பாம பதில் சொல்லுங்க..
ஒருவனுக்கு நல்ல பேர் வரக்கூடாதுங்கறதுக்காக கெட்ட விசயங்களா செஞ்சு கெட்ட பேர் எடுக்கனும்னு சாபம் கொடுப்பது எந்த வகையில் தண்டனை ஆகும் ??
ஒரு பெண்ணுக்குப் பதிலா பல பெண்களோட வாழ்க்கையை சீரழிப்பது தர்மமா??

மருமகள் ‍‍ மாமியார் கதையால்ல இருக்குது :-))

 
At Monday, 16 February, 2009, சொல்வது...

நன்றி அபுல். வெண்பூ உட்பட பின்னுட்டத்தில் சொன்ன பதிலைப் பார்க்கவும். ராமனின் நேர்
எதிர்மறையான கிருஷ்ணன் கேரக்டரும், அவன் சீதைக்கு செய்த அநியாயங்களும் எழுப்பிய கேள்விகள் ஒரு ஆர்வகோளாறாய் சிறுகதையாக்கியுள்ளேன் :-)

 
At Monday, 16 February, 2009, சொல்வது...

உஷா,

கதை மிக நன்றாக வந்திருக்கிறது. வாழ்த்துக்கள்!

"அவார்டா கொடுக்கறாங்க?" ஆர்வி

 
At Tuesday, 17 February, 2009, சொல்வது...

நன்றி ஆர்.வி

 
At Tuesday, 17 February, 2009, சொல்வது...

//திருடனாய், பொய்பேசுபவனாய், பல பெண்களை மணப்பவனாய் பிறப்பீராக!" //

வரம் நல்லா இருக்கே?

அக்கா, சொல்லாம இருக்க முடியலை, ஏதாவது புனைவு பூனைகுட்டின்னு ட்ரை பண்ணி இருக்கீங்களா? :))

 
At Tuesday, 17 February, 2009, சொல்வது...

ரங்கன் என்ன ஆச்சு? ஏன் கமெண்டை தூக்கிட்டீங்க? என் பதிலில் ஒரு ஸ்மைலி போட்டு
இருக்கணுமோ? புரியவில்லை.

அம்பி, உனக்கு கமெண்ட் போடுபோதே, பல்ப் எரிஞ்சிது. பையன் நேர இங்கிட்டு வந்து, ஈயம்
பித்தளைன்னு பேச போகிறான்னு ...நற நற :-(
பி.ந தானே, இன்னும் அடுத்த தளத்தில் நான் நகரவில்லை. முயற்சிக்கிறேன்

 
At Tuesday, 17 February, 2009, சொல்வது...

மிகவும் கடுமையான கமெண்ட் அது...
அதனால் தான்.. நீக்கிவிட்டேன்...

கதை அருமை...

//யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் ஆனால் படிக்கும் அனைவருக்கும் உணர்த்தியது அருமை.. கதையை விட கதையின் பின்னால் நீங்கள் சாடியிருக்கும் மேல்ஷாவனிச‌ குறிப்புகள் அற்புதம்.. பரிசு பெற முற்றிலும் தகுதியான கதையே, வாழ்த்துகள் & பாராட்டுகள்..//
ரிப்பீட்டு....
நன்றி...

 
At Tuesday, 17 February, 2009, சொல்வது...

ராமாயணம் தான் ...ஆனாலும் எத்தனை பூடகமா எழுதினாலும் நல்லா தான் இருக்கு. இதே சாயல்ல ஆனால் மாறுபட்ட காட்சிகளோடு "வித்யா சுப்பிரமணியம் "ஒரு சிறுகதை எழுதி இருக்காங்க படிச்சிருக்கீங்களா நீங்க ? அந்தக் கதை "மாய மான்" தொடர்பு படுத்தி வந்த இதே போன்றதொரு புனைவே,கதை நல்லா இருக்கு உஷா மேடம் .

 
At Tuesday, 17 February, 2009, சொல்வது...

நன்றி மிஸஸ்.டவுட். நீங்கள் குறிப்பிட்ட சிறுகதை படித்த நினைவில்லை. வித்யா சுப்பிரமணியன் மட்டுமல்ல, ராமாயண, மகாபாரத்தை தங்கள் கண்ணோட்டத்தில் பலரும் எழுதியிருக்கிறார்கள். நான் அதிகம் படித்தது மகாபாரத அலசல்தான்.

ரங்கன், தெளிந்தேன் :-)

 

Post a Comment

<< இல்லம்