Saturday, March 07, 2009

நம் செயல்களே சமூகத்தில் மரியாதையை ஏற்படுத்தி தருகின்றன




குஜராத் மாநிலத்தில் ஒன்றான சூரத், மாநகர அலுவலகத்தில் சரியாய் பத்து ஐந்துக்கு நுழைகிறேன். பத்தேகாலுக்கு தமிழகத்தை சேர்ந்த சூரத் கமிஷனர் அபர்ணா ஐ .ஏ.எஸ். உடன், விகடன் இணையதளத்தின் சக்தி 2009 சிறப்பு மலருக்காக ஒரு நேர்காணல்.


இன்னும் வரவில்லை, வந்து விடுவார் என்றார்கள். அதற்குள் மேடத்திடமிருந்து செல் பேசியில் அழைப்பு. 2007, ஏப்ரல் மாதம் பதவி ஏற்றுக் கொண்டவுடன், மத்திய மாநில அமைச்சின் நிதியுதவியுடன், சுமார் 2200 கோடி ரூபாயில், சூரத்தின் எதிர்கால வளர்ச்சியையும் மனதில் கொண்டு, கழிவு, மழை நீர் வடிக்கால் திட்டம் மற்றும் குடி நீர் குழாய் போடுவதும் வேகமாய் நடந்துக் கொண்டு இருக்கிறது. அவைகளைப் பார்வையிட்டுவிட்டு பத்து நிமிடத்தில் வந்து விடுகிறேன் என்றார் அதே போல் வந்தும் விட்டார்.

கமிஷனரின் உதவியாளர் அழைத்ததும், அவரின் அறைக்குள் நுழைகிறேன். பூங்கொத்தை நீட்டியவுடன், அழகாய் தமிழில் பேச ஆரம்பிக்கிறார்.

முதலில் என்னைப் பற்றிக் கேட்டார். சுருக்கமான அறிமுகத்துடன் சுவாரசியமான பேச்சு ஆரம்பித்தது.

ஐஏஎஸ் தேர்வு எழுத வேண்டும் என்று எப்படி தோன்றியது என்ற சம்பிரதாய கேள்வியுடன் நேர்காணலை ஆரம்பித்தேன்.

விசேஷமாய் எந்த நோக்கமும் இல்லை. என் தந்தை திரு. டி. ஆர்.எஸ் மணி, இந்தியன் ரெவன்யூ சர்வீஸில் பணியாற்றி கமிஷனராய் ஓய்வு பெற்றார். என் அத்தை சத்யபாமா ஐ ஏ எஸ். 1956. பேட்ச். ஆனால் நான் கலெக்டர் ஆக வேண்டும் என்றெல்லாம் நினைத்தது இல்லை. எம்.எஸ்ஸி, எம்.பில் படித்து முடித்ததும், பெற்றோர்கள் அறிவுரைப்படி யூபிஎஸ்ஸி தேர்வு எழுதி, மத்திய அரசு பணிக்கு சென்றேன். பிறகு ஐ ஏ எஸ் தேர்வு எழுதலாம் என்று நினைத்து, எழுதினேன். வெற்றி பெற்றேன் என்றார் வெகு சாதாரணமாய்.

முதல் போஸ்ட்டிங்?
1988ல் தேர்வு பெற்றதும், முதல் போஸ்ட்டிங் நாகாலாந்தில். எந்த ஊரில் போஸ்ட்டிங் போட்டாலும் நான் செய்யும் முதல் காரியம். அங்குள்ள கிராமங்களுக்கு போய் பார்ப்பது. கிராம தலைவர் போன்ற ஆட்களுடன் பேசி, அவர்களின் பிரச்சனைகளை புரிந்துக் கொள்வது. நடக்க பிடிக்கும் என்பதால் நடந்தே பல கிராமங்களுக்கு செல்லுவேன். மக்களின் குறைகளை காது கொடுத்துக் கேட்க ஆரம்பித்தாலே, அவர்களுக்கு நம் மீது நம்பிக்கை வரும். பிறகு பிரச்சனைகளை தீர்ப்பது சுலபமாகிவிடும். அடிப்படை தேவைகளுக்கு முதலில் முக்கியத்துவம் தருவேன்.

மொழி பிரச்சனையாய் இல்லையா?
பத்தாவதுவரை படித்தது டெல்லியில். ஹிந்தி நன்கு தெரியும். அங்கு டெல்லி தமிழ்ச் சங்கம் சார்ப்பாய் நடத்தப்படும் பள்ளியில் படித்தேன். புது மொழிகள் கற்பதில் ஆர்வம் உண்டு. நாகாலாந்தில் அம்மாநில மொழியில் பத்துவகையான (dialect) கிளை மொழிகள் உண்டு. அங்கிருந்த இரண்டரை வருடத்தில் நாகா கிளைமொழி ஒன்றை நன்கு பேச கற்றுக் கொண்டேன். மக்களின் பிரச்சனையை தீர்ப்பதற்கு முதல்படி, அவர்கள் மொழியை அறிவது.

எப்படி ஆரம்பித்தது ஐ ஏ எஸ் வாழ்க்கை?
அம்மா நாகாலாந்து வந்து பார்த்தார். சமாளித்துக் கொள்வேன் என்ற நம்பிக்கை அவருக்கு வந்தது நாங்கள் ஐந்து சகோதரிகள், ஒரு சகோதரன். படிப்பின் அருமையை பெற்றோர்கள் சொல்லிக் கொடுத்திருந்தார்கள். எல்லோரும் பட்ட மேற்படிப்பு முடித்து, தங்கள் தேர்ந்தெடுத்த நல்ல பணியில் இருக்கிறார்கள். நம் செயலை வைத்தே சமூகத்தில் மரியாதை கிடைக்கிறது. மக்களுக்கு நல்லது செய்வதே முதல் குறிகோள் என்பதை தெளிவுப்படுத்திவிட்டால், யாரும் அனாவசியமாய் குறிக்கிட மாட்டார்கள். சில சமயங்களில் குறிக்கீடுகள் வரத்தான் செய்யும். மக்கள் நலனையே முக்கியம் என்பதை தெளிவாக்கிவிட்டால், அவை மறைந்துவிடும். அதையும் தவிர என்பெற்றோர்கள், சகோதர சகோதரிகளின் ஆதரவு எனக்கு மிக பெரிய பலத்தை தருகின்றன.

குஜராத் வல்சாத், பரூஜ்ஜில் 95ல் இருந்து 99 வரை மாவட்ட ஆட்சியாளராய் (district collector) பணிப்புரிந்தேன். முழுக்க முழுக்க தொழில் நகரம். வெளிமாநிலங்களில் இருந்து வேலை தேடிவருபவர்களும் அதிகம். கொஞ்சம் சென்சிடீவ் ஏரியா.மாவட்ட ஆட்சியர்என்ற பொறுப்பு நம்மிடம் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக் கொண்டுவந்து,எந்த பிரச்சனையையும் சமாளிக்கலாம் என்ற தைரியத்தையும் தருகிறது.

டெல்லியில் 2002 - 2007 வரை கைத்தறி மேம்பாட்டு துறையிலும், நகர வளர்ச்சி டைரக்டராகவும் இருந்தேன். வேலை சுவாரசியமாகவும், சவாலாகவும் நிறைய கற்றும் கொண்டேன்.

நீங்கள் பெண் என்பதால், ஏதாவது தடை ஏற்பட்டு உள்ளதா? அதாவது உங்கள் வேலையில்?
இந்த பதவியில் ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லை. ஒருவேளை என்னுடன், என் கீழ் வேலை செய்பவர்களுக்கு இருக்கலாம். ஆனால் ஒரு பெண்ணால் சமூகத்தில் இருக்கும் சில பிரச்சனைகளை வெகு சுலபமாய் புரிந்து கொள்ள முடியும். அடிப்படை தேவையான குடி நீர் விநியோகம், மழை, கழிவு நீர் வடிக்கால், தெரு மேம்பால பராமரிப்பு மட்டுமில்லாமல் குழந்தைகள், பெண்கள், முதியவர்களுக்கு பல நலத் திட்டங்களை ஆர்வத்துடன் செய்ய முடிகிறது.

மாநகராட்சியின் கீழ் 30ஹெல்த் செண்டர்கள், 900 படுக்கை வசதியுடன் கூடிய இரண்டு மருத்துவமனைகள் இருக்கின்றன. அதில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, கர்ப்பிணிகளுக்கு, பாலூட்டும் தாய்மார்களுக்கு இலவச ஹெல்த், மெடிக்கல் செக்கப்புகள் போன்றவை எங்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மம்தா டிவாஸ்- தாய்மார்கள் தினம் என்ற பெயரில் மாதா மாதம் குடிசைபகுதியில் வாழும் பெண்கள் குழந்தைகளுக்கு ஹெல்த் செக்கப், கவுன்சிலிங், சத்துணவு பற்றிய விழிப்புணர்வு தருகிறோம். மழைக்காலத்தில் ஏற்படும் நோய்களுக்காக, ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் அமைக்கிறோம்.

மிக புதியதாய் இந்தியாவிலேயே முதல் முறையாய் அறிவித்துள்ள திட்டம், நகராட்சியில் பதிவு செய்யப்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி, போலியோ சொட்டு மருந்து போட வேண்டிய தேதியை எஸ் எம் எஸ் மூலம் அனுப்புகிறோம். இந்த ரிமைண்டர், குழந்தையின் பெயருக்கே அனுப்புகிறோம். இந்த திட்டம் மிக வெற்றிகரமாய் போய் கொண்டு இருக்கிறது.

சமீபத்தில் பிராஜக்ட் யசோதா என்ற பெயரில் தாய்பால் வங்கி ஆரம்பித்துள்ளோம். தாய்மார்களிடம், அதிகமிருக்கும் தாய் பாலை பெற்று முறைப்படி சேமித்து வைக்கப்படுகிறது. தாய் பால் கிடைக்காத, குழந்தைகளுக்கு இப்பால் தரப்படுகிறது. கிட்டதட்ட மாதம் தோறும் நூறு குழந்தைகள் இத்திட்டத்தால் பயனடைகிறார்கள். திட்டத்தை நடை முறைப்படுத்தியுள்ளோம்.

அனைத்துமே புதுமையான அருமையான திட்டங்களாய் இருக்கின்றன. வாழ்த்துக்கள்.பிறகு முதியோர்களுக்கு?

அவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாய் மூத்த குடிமக்களுக்கு சொத்துவரியில் ஐந்து சதவீதம் விசேஷ தள்ளுபடி அளித்துள்ளோம்.

சீனியர் சிடிசன் கம்யூனிட்டி செண்டர் ஏழு இடங்களில் திறக்க இருக்கிறோம். முதல் இடம் ராண்தேர் என்ற இடத்தில் திறக்க இருக்கிறது. பிராத்தனை/ தியான மண்டபம், லைப்ரரி, பூங்காவுடன் அவர்கள் கூடி பேச இடம். டே கேர் செண்டர். அதில் ஹெல்த் செக்கப்பும் இலவசமாய் உண்டு.

மனதுக்கு நிறைவான மற்றும் பாராட்டுக்கிடைத்த பணிகள்?

சிறந்த மாவட்ட ஆட்சியாளர் விருது வல்சாத் மாவட்டத்தில். வருவாய் துறை, ஆதிவாசி மற்றும் கிராம மேம்பாட்டு துறையில் நன்கு பணிபுரிந்ததற்கு கிடைத்தது.

தொழில்நகரமான பரூஜ்ஜில் தொழிற்சாலைகளை சுற்றியுள்ள கிராம அபிவிருத்திக்கு அங்குள்ள தொழிற்சாலைகளையும் பொறுப்பேற்க செய்தேன். டில்லியில் நகர அபிவிருத்தி திட்ட ஆணையத்தில் வேலை மிக சவாலாய் இருந்தது.

இவை எல்லாம் என் பணியில் மனத்துக்கு நிறைவானவை.

பேச்சு சுவாரசியத்தில் நேரம் போனதே தெரியவில்லை.

அவர் வேலையில் பொழுது போக்கு என்று எல்லாம் நேரத்தை செலவிட முடியாது என்பது தெரிந்தாலும், ஹாபி, விருப்பம் என்று இழுத்தேன்.

சமையல் செய்வது என்று சிரித்தார். அதை தவிர இசையார்வம் உண்டு. அம்மா மிக அழகாய் பூ தையல் போடுவார். எனக்கு தெரியும் விருப்பம் இருக்கிறது. நேரம்தான் இல்லை

கேட்ட கேள்விகளுக்கு அழகாய் தெளிவாய் சொல்லி முடிந்தவருக்கு நன்றி சொல்லிக் கொண்டே நானும் எழுந்தேன்.


--------------------------------------------------------------------------------

Labels:

15 பின்னூட்டங்கள்:

At Saturday, 07 March, 2009, சொல்வது...

அருமை உஷா, வாழ்த்துகள், சூரத் நகரமே இப்போது விழிப்புணர்ச்சியோடு இருக்கிறதையும் புரிந்து கொள்ள முடிகின்றது. முக்கியமாய் 90களின் கடைசியில் வந்த ப்ளேக் நோயின் தாக்குதலுக்குப் பின்னர் மொத்த சூரத்தும் கட்டுக் கோப்புடன் சுத்தத்தைக் கடைப்பிடிப்பதாயும் கேள்விப் பட்டேன். இன்னும் தாபி நதிக் கரையில் சூரத்தின் தொழில் சார்ந்த இடங்கள் இருக்குமிடத்தில் கொஞ்சம் ப்ளாஸ்டிக் குப்பைகள் காண முடிகின்றது. சூரத் வரும் வழியில் ரயில்வேயின் இடங்களில் உள்ள குடிசைப்பகுதிகள் ஓரளவுக்குத் தான் சுத்தம், சுகாதாரம் கடைப்பிடிக்கின்றன. அவற்றுக்கும் மாற்றுக் கிடைத்தால் நல்லது. எங்கள் ரயில் கடக்கும் வரையில் ஒரு பெண் மலஜலம் கழிக்கவேண்டி தண்டவாளங்களில் ஒதுங்க வந்தவல், கிட்டத் தட்ட அரைமணி நேரம் நின்று கொண்டிருந்தாள். இந்தக் கொடுமையும் விடியாதா எனத் தோன்றியது, அந்தப் பெண்ணின் இடத்தில் என்னை வைத்துப் பார்த்துவிட்டு மனம் அதிர்ந்தே போச்சு. நம்மால் தாங்க முடியுமா என!!!!!!!! இதுக்கும் ஒரு மாற்றுக் காண வேண்டும். நல்லதொரு பேட்டியைத் தந்ததுக்கும் மகளிர் தினத்துக்கும் வாழ்த்துகள்.

 
At Saturday, 07 March, 2009, சொல்வது...

நல்ல நேர்காணல் உஷா. பாராட்டுக்கள்.

 
At Saturday, 07 March, 2009, சொல்வது...

உஷா மேடம்,

மகளீர் நாளில் கமிஷனர் அபர்ணா அவர்களுடன் உங்கள் நேர்காணல் அவரது அறிமுகம் மற்றும் அனுபவங்கள் மிகவும் சிறப்பாக இருக்கிறது.

நீங்களும் அழகாக தெளிவாக எழுதி இருக்கிறீர்கள். உங்களது பதிவிலேயே மகளிர் அனைவருக்கும் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்

 
At Sunday, 08 March, 2009, சொல்வது...

கீதா, நம் நாடு மிக பெரியது. மக்கள் தொகையும் அதிகம். எல்லாருக்கும் படிப்பும் அதற்கேற்ற வேலையும் கிடைத்தால், நீங்கள் பார்த்த அவல நிலை மாறும். அதற்கு அரசியல் ஆட்சிபீடங்களில் இருப்பவர்களும், அதிகாரிகளும் மனம் வைக்க வேண்டும்.

பத்மா, கோவி நன்றி.

விஜி அழைப்புக்கு நன்றி.

 
At Tuesday, 10 March, 2009, சொல்வது...

அருமையான நேர்காணல்

வாழ்த்துகள்

 
At Tuesday, 10 March, 2009, சொல்வது...

வாழ்த்துக்களும்..பாராட்டுக்களும்.

அவரது பணியில் அரசியல் குறுக்கீடுகள்...இப்படி ஏதாவது கேள்வி கேட்டா அடிக்க வருவாங்களோ :))

 
At Wednesday, 11 March, 2009, சொல்வது...

//அவரது பணியில் அரசியல் குறுக்கீடுகள்...இப்படி ஏதாவது கேள்வி கேட்டா அடிக்க வருவாங்களோ :))//

குஜராத்தில் பல வருடங்கள் இருந்ததால் சொல்கின்றேன், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மாநிலத்தின் நலன்களே முக்கியமாய்க் கருதப் படுகின்றது என்பது சத்தியம். சிமன்பாய் படேல், ஊர்மிளாபென் படேல் போன்றவர்களின் ஆட்சியின் போதும் இருந்து பார்த்திருக்கின்றோம்.

இப்போதும் சென்றபோது அங்குள்ள கிராமங்களில் எல்லாம் ஒரு சின்ன சர்வே நடத்திய அளவில், எந்தவித அரசியல் குறுக்கீடுகளும் இல்லை என்றே தெரிய வருகின்றது. நர்மதா நீரை செளராஷ்டிராவுக்குக் கொண்டு வருவதற்கு மட்டும் கொஞ்சம் இப்போதைய மத்திய அரசு யோசிப்பதாயும், அதையும் சமாளிக்க இப்போதைய மாநில அரசு பெரு முயற்சி எடுத்து வருவதாயும் கேள்விப் பட்டோம். இம்மாதிரி இன்னும் பல இருக்கின்றன சொல்ல. கேரளாவின் மார்க்ஸிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரும், மாற்று மதத்தைச் சேர்ந்தவருமான அமைச்சரே இது பற்றிப் பாராட்டியதன் விளைவாக, கட்சியில் இருந்தும், அமைச்சர் பதவியில் இருந்தும் தூக்கி எறியப் பட்டது சமீபத்திய சரித்திரம்! :)))))))))))))))))

 
At Thursday, 12 March, 2009, சொல்வது...

நீங்க எடுத்த பேட்டியை படித்தேன்(அபி அப்பா லிங்கிலிருந்து தான்). நல்லா கோர்வையா இருந்தது.

அந்த மேடம் பேமிலி பத்தி ஒன்னுமே கேக்கலையே?

1)இவ்ளோ பெரிய பதவியையும், வீட்டு வேலைகளையும் எப்படி சமாளிக்கறீங்க?

2) உங்க ரங்கமணி உறுதுணையா இருக்காரா? இப்படி எதாவது சிண்டு முடியற கேள்விகள் இருக்க வேணாமோ? :))

உங்க காருண்யம் ததும்பும் ஸ்டாம்ப் சைஸ் போட்டோவையும் பாத்தேன். :))

 
At Thursday, 12 March, 2009, சொல்வது...

//2) உங்க ரங்கமணி உறுதுணையா இருக்காரா? இப்படி எதாவது சிண்டு முடியற கேள்விகள் இருக்க வேணாமோ? :))//

அம்பி, உங்க வேலையை எல்லாம் உஷா செய்யணும்னா எப்படி?? :P:P:P:P:P:P சிண்டு முடியறதுக்குன்னே பிறந்தவர் நீங்க! :)))))))))))))

 
At Monday, 16 March, 2009, சொல்வது...

///கீதா சாம்பசிவம் said...

குஜராத்தில் பல வருடங்கள் இருந்ததால் சொல்கின்றேன், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மாநிலத்தின் நலன்களே முக்கியமாய்க் கருதப் படுகின்றது என்பது சத்தியம். சிமன்பாய் படேல், ஊர்மிளாபென் படேல் போன்றவர்களின் ஆட்சியின் போதும் இருந்து பார்த்திருக்கின்றோம்.
//////

விரிவான பதிலுக்கு நன்றி கீதா சாம்பசிவம் அவர்களே.

 
At Tuesday, 17 March, 2009, சொல்வது...

@ச.சங்கர்,

இதென்ன பிரமாதம்? கீதா மேடம் சர்தார் வல்லபாய் படேல் காலத்துல இருந்தே குஜராத்துல இருந்து இருக்காங்க. :))

தன்னடக்கம் காரணமா வெளில சொல்லிக்கறதில்லையாக்கும். :))

 
At Tuesday, 17 March, 2009, சொல்வது...

//இதென்ன பிரமாதம்? கீதா மேடம் சர்தார் வல்லபாய் படேல் காலத்துல இருந்தே குஜராத்துல இருந்து இருக்காங்க. :))//

அட, எப்படிக் கண்டு பிடிச்சீங்க தாத்தா?? ஓ நீங்க தான் விஸ்வேஸ்வரய்யாவுக்கே ஆலோசனை சொன்னவராச்சே! அதானா! :P:P:P:P:P:P

@Usha, sorry for the Kummi in your blogpost! :))))))))))))))

 
At Monday, 27 July, 2009, சொல்வது...

http://www.hindu.com/2009/07/26/stories/2009072659870900.htm

தற்போது நடந்துகொண்டிருக்கும் இந்த காண்ட்ரவர்ஸ் பத்தி உங்க கருத்து என்ன ? அவர் ஏதோ ஒரு கோபத்தில் பேசப் போக, அதை லோக்கல் கேபிள் சானல்கள் திரும்பதிரும்ப காண்பிக்க, பிரச்னை பெரிய அளவில் ஊதி விட்டது யார் ? அவர் சூரத்தில் இருப்பது பிடிக்காத ஒரு குருப்பா ?

 
At Wednesday, 05 August, 2009, சொல்வது...

//அவர் ஏதோ ஒரு கோபத்தில் பேசப் போக, அதை லோக்கல் கேபிள் சானல்கள் திரும்பதிரும்ப காண்பிக்க, பிரச்னை பெரிய அளவில் ஊதி விட்டது யார் ? அவர் சூரத்தில் இருப்பது பிடிக்காத ஒரு குருப்பா ? //

கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லி இருக்கீங்க, இன்னும் உஷா வேறே வந்து சொல்லணுமா என்ன??? அவரே தமிழர் தானே, வெளிமாநிலத்தவர் தானே? மீடியாக் காரங்களுக்கு எப்படியாவது குஜராத்தில் ஒரு சின்ன நிகழ்வாவது அரசுக்குப் பாதகமா ஏற்படாதா? அதைப் பெரிசாக்கலாமே, உடனே மோடியின் நிர்வாகத்தைப் பழிக்கலாமேனு காத்திருக்காங்க, இது தான் முக்கியமாய்க் கவனிக்க வேண்டியது. உஷா, இந்தப் பின்னூட்டதைப் போடுவீங்கனு நம்பறேன்.

 
At Wednesday, 05 August, 2009, சொல்வது...

சாம்பார் வடை, கீதா இந்து பார்த்துதான் எனக்கும் செய்தி தெரியும். நான் பார்த்தவரையில்
மிக பேலன்ஸ்ட்டு அண்ட் ரொம்ப ஸ்ட்ராங் லேடி. அவர் அப்படி பேசினார் என்பது எனக்கு மிக
மிக ஆச்சரியம்.

இதற்கு மேல் சொல்ல ஒன்றும் இல்லை.

 

Post a Comment

<< இல்லம்