Thursday, March 19, 2009

வாசமில்லா மயிலிறகுகள்

வழக்கப்படி அத்தை வைத்த கீரை குழம்பின் வாசம். கையைக் கழுவினாலும் மணம் போகவில்லை. பாவம் அத்தை, எண்பது வயதில் பிள்ளைக்கும், மருமகளுக்கும் தன் கையால் சமைத்துப் போட வேண்டும் என்று ஆசை. நானும் ஸ்ரீயும், மாமாவும் சாப்பிட்டு முடிச்சாச்சு. அத்தையுடன் வம்பளந்துக் கொண்டே அவர் சாப்பிட்டு முடிக்க காத்திருந்தேன்.

காலி பாத்திரங்கள் எடுத்துப் போட்டு விட்டு, மூட்டு வலி எப்படி இருக்கிறது. சமையல்கார மாமி ஒழுங்காய் வருகிறாரா, மாமாவின் பிபி ரிபோர்ட் போன்ற சம்பிரதாய கேள்விகளைக் கேட்டுவிட்டு,
மீண்டும் கையை முகர்ந்துக் கொண்டே மாடிப் படி ஏறினேன். மொட்டை மாடி பெஞ்சில் கையில் டிரான்ஸ்சிஸ்டர் ரேடியோவில் பழைய பாடல்கள் கேட்க கண்ணை மூடி படுத்திருந்தார் என் கணவர் ஸ்ரீ குமார்.

மாயவரத்தின் மாறாத ஒரு கிராமிய சூழ்நிலை, வாசம். சிலுசிலுவென்ற காற்று. ஓங்கி வளர்ந்திருந்த தென்னை மர ஓலைகளின் சலசலப்பு.

''என்னமா ஆனந்த சயனம்" என்று கையை கிள்ளினேன். "ராட்சசி, இப்படியா கிள்ளுவது" என்று கிள்ளிய இடத்தை தேய்த்து விட்டுக் கொண்டிருக்கும்பொழுது, மாமா படி ஏறி வரும் சத்தம் கேட்டது.

மாமா கொஞ்சம் பரபரப்புடன், "இங்க பேங்க் மேனேஜர் கிருஷ்ணன்னு பேர். பியூசி பிரசிடென்சில உன்னோட படிச்சாராம். ட்ரிப்ளிகேன்ல உங்க வீட்டுக்கு பக்கத்துல இருந்தாராம்'' என்று ஆரம்பித்தார்.

நான் முழித்தேன்.

''யாருபா?'' ஸ்ரீ கேட்டதும்,

'' நாலு வருஷமா பேங்கல மேனேஜரா இருக்காரு. நேத்து காலைல பேங்க்குக்கு போறேன், வி ஆர் எஸ் வாங்கிக் கொண்டு, ஓரே பொண்ணாம், கானடால இருக்கிறாளாம். அவளோட போய் இருக்கப் போகிறேன். இன்னைக்கு நைட் கிளம்புரேன்னார். பாவம் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஓய்ப்பும் தவறிட்டா போல. ஏதோ பேச்சு வாக்கில் உங்க ரெண்டுபேரையும் பத்தி சொன்னேன். அப்பத்தான் தெரிஞ்சுது, சின்ன வயசுல உங்க வீட்டுக்கு எதிர் வீட்டுல இருந்தாராம். நீ சென்னை மெடிக்கல்
காலேஜ்ல சேர்ந்தது, உங்கண்ணன் கார்த்திக் கோயம்பத்தூர்ல இன் ஜினியரிங் படிச்சது எல்லாம் அவருக்கு தெரிஞ்சியிருக்கு. உன்ன பார்க்கணும்னு ரொம்ப பிரியப்பட்டார். நீங்க ரெண்டு பேரும் வரீங்கன்னு சொன்னேனா, அவரே வீட்டுக்கு வரேன்னார். நாந்தான் வர ராத்திரி ஆயிடும். காலைல நாங்களே வரோம்னு சொல்லிட்டு வந்திருக்கேன். இதோ இப்ப போன் செஞ்சி விசாரிச்சார். உன்னை கேட்டதற்கு மாடிக்கு போயிட்டேன்னு சொன்னேன்" மாமா விடாமல் கதை சொல்ல சொல்ல எனக்கு அந்த கிருஷ்ணன் யார் என்றே தெரியவில்லை. எவ்வளவு யோசித்தும், நினைவுக்கு வரவில்லை.

மாமா பேசிக் கொண்டு இருக்க, சிலுசிலு காத்தும் பயண அலுப்பும் சேர கண்களை சொக்கியது.

''யார் அது? ஏதாவது சின்ன வயசு லவ் மேட்டரா? எதுவானாலும் சொல்லிடு நா தப்பா நினைக்க
மாட்டேன்" ஸ்ரீயின் உல்லாச குரல், காதில் விழுந்ததும் கண்களை திறந்தேன்.
மாமா கீழே இறங்கிப்போயிருந்தார்.

சூழ்நிலையும், இயற்கையின் குளுமையும் சூழ்நிலையை ரம்யமாக்கியிருந்தது.

ஸ்ரீயின் ஒரு நாள் தாடி என் கன்னத்தில் குத்த, " அய்யே, போதுமே! நாங்க எல்லாம் படிப்புல கோல்ட் மெடலிஸ்ட், காதல் கத்திரிக்காய் எல்லாம் நெனச்சும் பார்த்தது இல்லை. உங்கம்மா வேற பேத்திக்கு எப்போ கல்யாணம், இருபத்தி ஆறு வயசாச்சு. ஏதாவது காதல், கீதல்ன்னு இருக்கான்னு நேராவே கேட்டுட்டாங்க. கையை எடுங்க! நேரமாச்சு கீழே போகலாமா" என்றேன்.

காலையில் எழும்பொழுதே, மாமா பரபரவென்று கிளம்பிக் கொண்டு இருந்தார். குளித்து விட்டு, சமையல்கார மாமி தந்த பலகாரத்தை சாப்பிட்டு விட்டு கிளம்பினோம். கிருஷ்ணனைப் பார்த்துவிட்டு, மயூரநாதரையும் தரிசித்துவிட்டு வர திட்டம்.

காரில் ஏறியதும் அத்தை, " தைலா மாமிக்கிட்ட அதிரசம் சொல்லி வெச்சிருக்கேன். ஜவ்வரிசி வடாமும் வேணுமில்லே'' கேட்டதும்,

''அம்மா, கலாவுக்கு கொலஸ்ட்ரால் இருக்கு. ஒரு நாலு போதும், இந்த வத்தல் வடாம் எல்லாம் யாரு இருக்கா சாப்பிட்ட?" என்றதும், "அத்தை, சும்மா சொல்கிறார். பத்து அதிரசம் வாங்குங்க, அப்படியே வேப்பம் பூ கிடைக்குதான்னு பாருங்க. உங்க பிள்ளையாண்டானுக்கு பிடிச்ச ஓமப்பொடியும் சொல்லியிருக்கீங்க இல்லே" என்றேன்.

"நீங்க வரப்போவது நேத்துதானே தெரிஞ்சிது. போன் பண்ணி சொன்னேன், அந்த மாமி கும்மோணம் போயிருக்கான்னு அவ பொண்ணு சொன்னா. ஆர்டர் தந்துட்டேன்.எதுக்கும் நேர்ல போய் சொல்லிட்டா நல்லது. மாமியின் பட்சணங்களுக்கு ரொம்ப டிமாண்டு இப்ப"

நெல்வயல்கள் பிளாட்டுகளாய் மாறி கட்டிய வீடு. கார் நிற்கும்பொழுதே, "வாங்கோ வாங்கோ" என்ற பலத்த வரவேற்ப்பு. வழுக்கை தலையுடன், கொஞ்சம் குள்ளமான உருவம். மாமாவை இவரா என்று ஜாடையாய் கேட்க, "மிஸ்டர் கிருஷ்ணன், இவங்க தான் டாக்டர் கலாவதி, என் மருமகள். இது என் மகன் டாக்டர் ஸ்ரீகுமார்" என்றார்.

"வாங்க கலா, உங்க அப்பா அம்மா இப்ப எங்கே இருக்காங்க? நீங்க பம்மலுக்கு போய்விட்டதா நியூஸ் தெரிஞ்சி நான் தேடிக்கிட்டு வந்தேன். ஆனா நீங்களும்,கார்த்திக்கும் ஹாஸ்டலில் படிக்கிறதா உங்கம்மா சொன்னாங்க. நானும் ஹாஸ்டலுக்கு வந்தேன். ஆனா உங்களைப் பார்க்க முடியவில்லை. பியூசி முடிச்சதும், அப்பா தீடீர்ன்னு காலம் ஆனதும், கிராமத்துக்குப் போயிட்டோம். திருச்சிலேயே பிஎஸ்ஸி முடிச்சேன். பிஎஸ் ஆர்பி எழுதி பாங்க்ல சேர்ந்தேன்...." மனுஷன் திறந்த வாய் மூடாமல் முப்பது வருஷத்துக்கு முந்தின கதையை ஆரம்பிக்க, அரைகுறையாய் புரிந்து, நான் ஙே என்று விழித்தேன்.

"சரியான அறுவை. நானும் அம்மாவும் கிளம்புகிறோம். அதிரசம் மாமி, மயூரநாதரை பார்த்துவிட்டு வந்துவிடுகிறோம். நீயும் அப்பாவின் பேசிட்டு வாங்க" என்று முணுமுணுத்துவிட்டு, "சார் நீங்க பேசிக்கிட்டு இருங்க, ஒன் அவர்ல வந்துடுகிறோம்'' என்று அப்படியே திரும்பிவிட்டார்.

உள்ளே இருந்து ஒரு வயதான அம்மாள் காபி கொண்டு வந்து தந்தார்.

"இன்னக்கு நைட் சென்னைக்கு கிளம்புகிறேன் கலா! எங்க உங்களைப் பார்க்காம போயிடுவேனோன்னு இருந்தது. பியூசி மார்க் ஷீட் வாங்க சென்னைக்கு வரேன் நீங்க வீட்டை காலி செஞ்சிட்டு பம்மலுக்கு போய் விட்டதா சொன்னாங்க. உங்கக்கா லீலா எங்க இருக்காங்க. கார்த்திக்? ஆரம்பத்துல அவனுக்குக்கூட லெட்டர் போட்டேன். ரிப்ளையே போடலை"

அக்கா டெல்லில செட்டில் ஆயிட்டா. அண்ணா... போன வருஷம் ஹார்ட் அட்டாக்.." என் குரல் தடுமாறியது.

"ப்ச்.. சாரி." என்றவர், மீண்டும் பழைய கதைகளை ஆரம்பித்தார்.

மாமா அங்கிருந்த பத்திரிக்கையை எடுத்து படித்துக் கொண்டு இருந்தார். ஏதோ கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிக் கொண்டு இருந்தாலும், யார் என்ற நினைவு வரவேயில்லை. திருவல்லி கேணியில் எங்கள் தெருவில் எதிர்பக்கத்தில் குடியிருந்திருக்கிறார். மாநில கல்லூரியில் என்னுடன் ஓரே வகுப்பு. ஹ¥ ஹ¥ம், என்ன யோசித்தும் எதுவும் பிடிபடவில்லை.

மாமா, "இந்த தெருல தானே கோபால் இருக்கிறார். பத்து நிமிஷம் பேசிட்டு வந்துடரேன்" என்றுச் சொல்லிவிட்டு போனார்.

இருந்தாற்போல "கொஞ்சம் இருங்க" என்று சொல்லிவிட்டு, எழுந்து உள்ளே போனார்.

''கலா! நாம காலேஜ் மாகசின் ஞாபகம் இருக்கா?" பழைய மக்கிப் போன தாள்களை நீட்டினார்.

'' இதோ இது நான் எழுதிய கவிதை. அதுக்கு நீங்க வரைஞ்ச படம்'' கிருஷ்ணன் காட்ட, ஒரு பெண் படமும் ஆறு வரி கவிதை, கீழே ஆர்.கிருஷ்ணன் என்ற பெயர். கண்கள் அங்கேயே நின்றுவிட்டது.ஆர். கிருஷ்ணன்.. இது இது... குரங்கு ராதா இல்லே, சட்டென்று எல்லாமே நினைவுக்கு வந்தது. எப்படி அந்த பெயர் வந்தது என்று நினைவில்லை. ராதா கிருஷ்ணனுக்கு நிக் நேம் குரங்கு ராதா. ராதா கிருஷ்ணனை தான் ஆர். கிருஷ்ணன் என்று போட்டுக் கொள்கிறார் போல!

அக்காவும், நானும் இந்த ஆவணி, தாவணி கவிதையைப் படித்துவிட்டு சிரித்துக் கொண்டிருக்க, அப்பா வந்தது தெரியாமல், நன்றாக திட்டு வாங்கியது, அப்பாவும் அந்த கவிதையைப் படித்துவிட்டு, கார்த்திக்கிடம் , இந்த மாதிரி காவாலி பயல்களுடன் என்ன சகவாசம் என்று திட்டியது எல்லாம் ஒவ்வொன்றாய் நினைவு வந்தது.

யாரோ ஒரு ஆள் பெரிய பைகளுடன் உள்ளே வந்தார். கிருஷ்ணன் எழுந்து, " இங்க ஒரு மாமி அதிரசத்துக்கு ரொம்ப பேமசாம். எம் பொண்ணுக்கு கொண்டு போக, ஸ்வீட்ஸ், காரம், வத்தல் வடாம் அப்பளம் எல்லாம் ஆர்டர் செய்தேன். உங்களுக்காக அரை கிலோ அதிரசம். உங்களுக்கு அதிரசம்ன்னா ரொம்ப பிடிக்கும் இல்லே! தீபாவளிக்கு எங்கம்மா அதிரசம் செய்வாங்க. உங்களுக்குன்னு நான் கொண்டு வந்து தருவேனே ஞாபகம் இருக்கா?"

அதே முகம். கவிதை புத்தகத்தை நீட்டி பதட்டத்துடன் முகம் பார்க்க தயங்கிய முகம்.

காலம் திரும்பி போகுமா? கண் முன்னால் பெல்பாட்டம் போட்டுக் கொண்டு, அம்மா தர சொன்னாங்க என்று குழைவுடன் எவர்சில்வர் டப்பாவை நீட்டிய அதே அரும்பு மீசை முகம். அன்று புரியாதது இன்று புரிந்தது. பேச்சுக்கு பேச்சு கலா என்று பெயர் சொல்லி அழைப்பது எல்லாம் ஏனோ துக்கத்தில் தொண்டையை அடைத்தது.

நீட்டிய பொட்டலத்தை வாங்கி அப்படியே அங்கிருந்த மேஜை மேல் வைத்து விட்டு, "ரொம்ப தேங்ஸ் மிஸ்டர் கிருஷ்ணன், ஆனா வயசாச்சு இல்லையா? கொலஸ்ட் ரால். இதை எல்லாம் கண்ணுல கூட பார்க்க கூடாது. ரொம்ப நல்லா இருந்தது, பழைய நினைவுகள். உங்களுக்கும் வேலை இருக்கும், நானும் கிளம்புகிறேன்" சட்டென்று எழுந்து வெளியே வந்தேன்.

அதே நேரம் காரும் வர அதில் ஏறும்பொழுது எதிர் பக்கத்தில் இருந்து மாமாவும் வந்து கிருஷ்ணனிடம் "வரேன் சார். உங்க பொண்ணுக்கு என் ஆசிர்வாதம். ஆமா அவ பேர் என்ன சொன்னீங்க?"

மாமா என்று வேகமாய் அழைத்தேன். "என் செல் அங்க சோபால விட்டுட்டேன் போல இருக்கு" என்று
சொன்னதும், கிருஷ்ணன் நான் பார்க்கிறேன் என்று உள்ளே ஓடினார்.

''சே, ஹேண்ட் பேக்குல இருக்கு, நீங்க வண்டில ஏறுங்க மாமா'" என்றேன். மாமா இங்கேயே இருக்கு சார் என்று வாசலைப் பார்த்து கத்தினார்.

நானும் ஏறியதும் "இந்தா உன் பேவரெட் "என்று ஸ்ரீ பொத் என்று மடியில் அதிரச பொட்டலத்தைப் போட்டதும் "என்ன ஸ்ரீ இது? எண்ணையா இருக்கு, புடைவையில கறையாயிடாது" என்னை மறந்து கத்தினேன்.

அத்தையின் முகம் மாறியதும், "சாரிபா, எங்கண்ணா கார்த்திக் பத்தி பேசிக்கிட்டு இருந்தோமா, கொஞ்சம் அப்செட், போகலாமா?" என்றேன்.

************
(சங்கமம் கல்லூரி போட்டிக்காக)

Labels:

16 பின்னூட்டங்கள்:

At Thursday, 19 March, 2009, சொல்வது...

சூப்பர்.

வெற்றிக்கு வாழ்த்து(க்)கள்.

 
At Thursday, 19 March, 2009, சொல்வது...

சூப்பரா இருக்கு கதை...நானும் ட்ரை பண்றேன் இப்படி எழுத ??? நீங்க வந்து கருத்து சொல்லனுமாக்கும்?! ஓகே சொல்லுங்க மேடம்.

 
At Thursday, 19 March, 2009, சொல்வது...

சூப்பர் கதை வழக்கம் போல! வெற்றிக்கு வாழ்த்துக்கள்!!!

 
At Friday, 20 March, 2009, சொல்வது...

போட்டிக்கு நாங்களும் வந்திட்டோம்ல.

உங்க கதை நல்லா இருக்குன்னு சொன்னா எனக்கும் ஷொட்டு/குட்டு கிடைக்குமா?

 
At Friday, 20 March, 2009, சொல்வது...

உங்க கதைத்தலைப்பு எனக்கு ரொம்பப் பிடிச்சி இருந்தது.

 
At Saturday, 21 March, 2009, சொல்வது...

நல்லா ரசிச்சு எழுதியிருக்கீங்க ..

வாழ்த்துக்கள்..

தலைப்பூ கூட 77-78ஐ ஞாபகப் படுத்துகிறது..

 
At Saturday, 21 March, 2009, சொல்வது...

அசோகமித்திரன் டச்சு.

வாழ்த்துக்கள் ஜெயிச்சதுக்கு

 
At Saturday, 21 March, 2009, சொல்வது...

துளசி, அபி அப்பா, மிஸஸ் டவுட், கெ.பி,sursஷ் வாழ்த்துக்கு நன்றி

அபி அப்பா, "குரங்கு ராதா" பெயர் குடுத்து உதவியதற்கு நன்றி

ரவி, இன்னும் ஜெயிக்கலே, இப்பத்தான் போட்டி ஆரம்பிச்சியிருக்கு!

அசோகமித்திரன் டச்சா??? கொஞ்சம் ஓவரா இல்லே :-)

 
At Saturday, 21 March, 2009, சொல்வது...

என்னமோ எடிட்டிங்கில் குழப்பம் போல. இல்லை நீங்க எளக்கியவியாதி ஆன எபெக்ட் - இது ரெண்டில் எதோ ஒண்ணு.

மேட்டர் ஓக்கே ஆனா பிரசண்டேஷன் அவுட்டு என்பது என் எண்ணம்!

 
At Saturday, 21 March, 2009, சொல்வது...

//அசோகமித்திரன் டச்சு.

வாழ்த்துக்கள் ஜெயிச்சதுக்கு//

இல்லை, உஷா டச் தான். அசோகமித்திரன் காதல் விஷயத்தில், இத்தனை செண்டிமெண்ட் இல்லையே! திரும்பப் படிங்க அசோகமித்திரனை!

உஷா, வாழ்த்துகள். ஆனாலும் ஆரம்பத்திலேயே புரிஞ்சது! அதனால் எதிர்பார்ப்பு இல்லை! புரியும்னு நம்பறேன். :)))))))))

 
At Sunday, 22 March, 2009, சொல்வது...

மலரும் நினைவுகள் அவருக்கு மட்டுமா. பாவம் கிருஷ்ணன்!!

கடைசில பொண்ணு பேரைச் சொல்லாம விட்டது பெரிய சஸ்பென்ஸ்.:)

 
At Sunday, 22 March, 2009, சொல்வது...

கீதா, அசோகமித்திரன் டச் என்றதும் நானே ஆடிப் போய்விட்டேன். ரவி ஏதாவது காமடி
செய்கிறாரோ என்றும் தோணியது.

கீதா, இலவசம் விமர்சனத்துக்கு நன்றி

வல்லி, சஸ்பென்ஸ் சஸ்பென்சாக இருக்கட்டுமே என்றுதான்!

sureஷ், உங்க பெயரில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் செஞ்சிட்டேன், மன்னிக்க

 
At Monday, 23 March, 2009, சொல்வது...

உஷா

கதை நல்லா...

சரி , கிருஷ்ணன் பெண்ணின் பேர் போல சஸ்பென்ஸாகவே இருக்கட்டும்..ஹி..ஹி..ஹி.

 
At Monday, 23 March, 2009, சொல்வது...

சூப்பரா எழுதியிருக்கீங்க.

//"வரேன் சார். உங்க பொண்ணுக்கு என் ஆசிர்வாதம். ஆமா அவ பேர் என்ன சொன்னீங்க?" //

பேச்சுக்கு பேச்சு கலா கலா-ன்னு சொல்லிட்டு... பொண்ணுக்கும் அப்படியே பேர் வச்சிருப்பாரா என்ன? :-))

குரங்கு ராதா - அபி அப்பாவோட பேடண்ட் இல்லையோ? அவரும் வந்து வாழ்த்திட்டதனால லீகல் பிரச்சினை எதுவும் இருக்காதுன்னு நினைக்கிறேன்.

வாழ்த்துகள்!

 
At Monday, 23 March, 2009, சொல்வது...

//At Saturday, 21 March, 2009, இலவசக்கொத்தனார் சொல்வது...

மேட்டர் ஓக்கே ஆனா பிரசண்டேஷன் அவுட்டு என்பது என் எண்ணம்!
//

இவருதான் சைலண்ட் ஜட்ஜாமே? அப்படித்தான் மண்டபத்துல பேசிக்கிறாங்க மக்கள்ஸ்ஸ்ஸ்ஸ் :)

 
At Tuesday, 24 March, 2009, சொல்வது...

வல்லிசிம்ஹன் said...
//கடைசில பொண்ணு பேரைச் சொல்லாம விட்டது பெரிய சஸ்பென்ஸ்.:)//

காலம் கடந்து மயிலிறகின் வாசம் மெலிதாகத் தன்னைச் சுற்றிப் படருவதாய் உணர்ந்த கலா, கிருஷ்ணன் தன் பெண்ணின் பெயரைச் சொல்லி விடக் கூடாதென்ற பதட்டத்திலேயே செல்ஃபோனை மறந்து வைத்து விட்டதாக ஆடி இருந்திருக்கிறாளன்றோ சின்ன நாடகம். அந்த இடம் அருமை. கதை வெகு அருமை.

வாழ்த்துக்கள் உஷா.

 

Post a Comment

<< இல்லம்