Sunday, April 26, 2009

40 சீட் அல்லது இப்படியும் நடக்கலாம்

டீ கடை வாசலில் ரத்தத்தின் ரத்தம் டீ அருந்தியப்படி உட்கார்ந்திருக்கிறார். முகம் மலர வேகமாய் அங்கு வந்த உடன் பிறப்பு "இன்னாமோ ஒங்க அம்மா, வெச்சிச்சு ஆப்பு. நாங்க கெலிச்சிடுவோம்ன்னு நேத்து சவுண்டு வுட்டியா, பேப்பரு பார்த்தீயா? தலைவரு அண்ணா சமாதியாண்ட உண்ணாவெரதம் இருக்க தொடங்கிட்டாரு. அவுரு ராஜதந்திரி, சாணக்கியரு. ஒங்க தில்லாலங்கடி வேலை எல்லாம் அவுருக்கு ஜூஜூபி" என்றார் உ.பி

"தோடா எங்கம்மா தனி ஈழம் அமைச்சே தீருவோம்ன்னு அரிக்கைவுட்டதும், இவுருக்கு பக்குன்னு பூட்சு. அவுரு பங்குக்கு எத்தையாவது செய்யணும்னு, பாவம், வயசான காலத்துல இதெல்லாம் தேவையா?. எளுதி வெச்சிக்கோ, மயக்கம் போட்டு வுளுந்திட்டாரு. ஆஸ்பத்திரில சேர்த்துட்டோம், டாக்டருங்க உண்ணாவிரதம் இருக்க கூடாது சொல்லிட்டாங்கன்னு நூஸ் வரலே, என்னிய இன்னான்னு கேளு"

உ.பி பதில் அளிக்கவில்லை. டீ கடை கூட்டம் இரு பிரிவாய் பிரிந்துக் கொள்கிறது.

"பாப்பானுங்கதான் எங்களுக்கு ஆதரவுன்னு சொல்லிக்கினு இருந்தீயே, கம்ப்யூட்டருல எல்லாம் எங்களுக்கு ஆதரவு பெருகிடுச்சு தெர்யுமா? அம்மான்னா சும்மாவா?'

"நெஞ்ச தொட்டு சொல்லு, உங்க கட்சி கெலிச்சிடுச்சுனா, தமிள் ஈழம் வந்துடுமா?"

"தோடா இது எலிக்சனு. அத்த தொட்டு பேசுரதை எல்லாம் ஜனங்களே நெனப்புல வெச்சிக்கிறது இல்லே, இவுரு வண்டாரு கேள்வி கேட்டுகினு.?"

பாவம் உ.பி மீண்டும் மெளனத்தில் ஆழ்கிறார்.

"ஒரு மேட்டர் எங்க கட்சில பேசிக்கினு இருக்காங்க. அத்த சொன்னா நீ ஆடிப் பூடுவே. ஒங்க சாணக்கியரோட அடுத்த மூவு இன்னா தெரியுமா?" ர.ர கேட்டதும் உ. பி பரபரப்பு அடைகிறார்.

"இன்னாடா மேட்டரு. எங்களுக்கு தெரியாமே?"

"இந்த எலிக்சனுல நாங்கத்தான் கெலிக்க போறோம். அம்மா காட்டுகிற ஆளுதான் பி.எம்மு. ஒடனே உங்க ஆட்சியை கலச்சிட்டு, சட்டசபைக்கு தேருதலு. நாங்க ஜெயிச்சி, ஆட்சியை புடிக்க போவது நிச்சியம், ஆனா....." நிறுத்தினார் ர.ர

கூட்டம் ஆவலுடன் ர.ர வின் முகத்தையே பார்கிறது.

"இந்த எலக்சன்ல தோத்தா இன்னா ஆகும்ன்னு ஒங்க தலைவருக்கு நல்லா தெரியும். எங்கம்மா தமிழ் ஈழம் னு சொன்னதும், ஐயா சுதாரிச்சிக்கிட்டு இருப்பாரு.
அதனால, பதவி எனக்கு தோள்ல இருக்கிற துண்டு மாதிரின்னு பழைய டைலக்க எடுத்துவுட்டுட்டு, ராஜினாமா செய்துட்டு தேர்தலை சந்திக்கிறேன்னு பிலிம்
காட்ட ஆரம்பிச்சாருன்னா, தேர்ரதுக்கு சான்சு கீது"

"அப்ப காங்கிரசுக்கு ஆதரவு?"

"இன்னாடா அறியா புள்ள மாதிரி கேக்குரே? ஆதரவு அப்படியே இருக்கும். நாங்க பார்லிமெண்டுல போயி கொரலு கொடுப்போம். இலங்கை தமிழருக்காக ன்னு வக, வகயா டயலாக்கு கீதே அத்தவுட்டா ஆச்சு"

உ.பி ஆழ்ந்த யோசனையில் ஆழ்கிறார். முகத்தில் லேசாய் மலர்ச்சியும் தோன்றுகிறது.

"அது சரி, காலைல இருந்து கூட்ட கூட்டமாய் மூட்ட முடிச்சோட புள்ள குட்டிங்கள இஸ்துக்கினு ஜனங்க பீச்சாங்கர பக்கமா போய்கினு கீறாங்களே இன்னா மேட்டரு?"

"ஆமா இல்லே, நானும் பாத்தேன்... தோ நில்லு சார். யாரு நீங்க எங்க போய்கீனு இருக்கீங்க? "

"ஐயா நாங்கள் எங்கட நாட்டுக்கு திரும்பிக்கொண்டு இருக்கிறோம். கடற்கரையில் இருந்து கள்ள தோணி பிடித்து இலங்கைக்கே செல்கிறோம். உங்கள் தலைவர்கள்
எங்கள் சோகங்களை கமடி ஆக்கிவிட்டார்கள். இதற்கு எங்கள் அதிபர் ராஜபக்சேயே பரவாயில்லை. நாங்கள் வருகிறோம்.. இல்லை இல்லை கொத்து குண்டு
பட்டு செத்தாலும் சரி, இனி இங்கு திரும்ப மாட்டோம்" என்று சொல்லிக் கொண்டே செல்கிறார்கள்.

Labels: , ,

7 பின்னூட்டங்கள்:

At Sunday, 26 April, 2009, சொல்வது...

//எளுதி வெச்சிக்கோ, மயக்கம் போட்டு வுளுந்திட்டாரு. ஆஸ்பத்திரில சேர்த்துட்டோம், டாக்டருங்க உண்ணாவிரதம் இருக்க கூடாது சொல்லிட்டாங்கன்னு நூஸ் வரலே, என்னிய இன்னான்னு கேளு"//

:)))

 
At Sunday, 26 April, 2009, சொல்வது...

//. நாங்கள் வருகிறோம்.. இல்லை இல்லை கொத்து குண்டு
பட்டு செத்தாலும் சரி, இனி இங்கு திரும்ப மாட்டோம்" என்று சொல்லிக் கொண்டே செல்கிறார்கள்.
///

:(
நம்ம ஊர் அரசியல்வாதிகள் - காமெடிபீஸ்கள் - மீது நம்பிக்கை வைத்து அகதிகள் கதியற்றே போய்விட்டார்கள் !

 
At Sunday, 26 April, 2009, சொல்வது...

ஏம்மா...நல்லாத்தான் கீது.
ஆமாம் அது என்ன ராஜபக்ஷி?

ராஜாளிப்பறவை மாரியா?

 
At Sunday, 26 April, 2009, சொல்வது...

வாஸ்த்தவம் தான் ,இன்று இலங்கைத் தமிழர் பிரச்சினைகள் அரசியல் கோமாளிகளால் காமெடி ஆக்கப்பட்டு விட்டது, பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் நிச்சயமாய் அந்த மக்களுக்கு ஆசுவாசமும் விடுதலையும் கிடைத்தே தீரும் ,இதை நான் சொல்லவில்லை பலநாடுகளின் விடுதலைப் போராட்ட வரலாறு சொல்கிறது,நேற்று ரா,சனார்த்த்னத்தின் பேட்டியில் கூட வாசித்தேன்.200 ஆண்டுகள் நம்மை அடக்கி ஆண்ட வெள்ளையர்களிடமிருந்து நாம் சுதந்திரம் பெற்றோமில்லையா? அது வேறு வகை,இது வேறு வகை என்று பேதம் பிரித்துப் பேசினாலும் நடந்து கொண்டிருக்கும் கொடுமைகளுக்கும் சோகங்களுக்கும் நிச்சயமாய் விடிவு வந்தே தீரும்,

 
At Monday, 27 April, 2009, சொல்வது...

நல்லிதான் இரிக்கீது... ஆனால் எங்களை வச்சு கொமடி பன்ன்தீங்கோ

 
At Tuesday, 28 April, 2009, சொல்வது...

ஆயில்யன் நன்னி.

துளசி, ராஜபட்சி என்பது ராஜாளி, பருந்து போன்ற பறவைகளுக்கு பெயர். பிணம் தின்னும்
கழுகும் இதில் சேர்த்தியா என்று தெரியவில்லை.

மிஸஸ். தேவ்! உங்கள் நம்பிக்கை வாழ்க.

லோயர், ஆட்சியைப் பிடிக்க அடிக்கப்படும் கூத்துக்களைப் பார்த்து மனம் நொந்து எழுதியது.
நையாண்டி/ அங்கதம் என்பதும் கோபத்தின் இன்னொரு வெளிப்பாடு. அதனால் அரசியல், வருத்தம்,
நையாண்டி என்று குறிச்சொல் தந்தேன்.

 
At Wednesday, 06 May, 2009, சொல்வது...

உஷா. உங்களுக்கு பட்டாம்பூச்சி விருது வழங்கியிருக்கிறேன். அதன் விதிமுறைகளையும் இந்த இடுகையில் சொல்லியிருக்கிறேன். நன்றி.

http://koodal1.blogspot.com/2009/04/blog-post_25.html

 

Post a Comment

<< இல்லம்