Thursday, March 01, 2007

இதுவும் ஒரு சரித்திரக்கதை

மன்னர் தன் பரிவாரங்களூடன் வெளியேறியதும் முதன்மை மந்திரி மெதுவாய் புறப்பட்டார். மனம் கிடந்து தவித்தது.கிராதகன் ஐநூறு சாடி ஆனிபொன் அல்லவா கேட்கிறான், குருவி சேர்ப்பதுப் போல மூன்று தலைமுறையாய் சேகரித்த பொக்கிஷம்,கோவில் கட்ட கொடு என்று ஆணையிடுகிறான். மன்னன் அல்லவா, கேட்டதும் கொடுத்துதானே ஆகவேண்டும்! தலை தப்பிக்கவேறு வழி?

"என்ன மந்திரியாரே, பலத்த யோசனை? கோவில் என்பது நல்ல காரியம் தானே.. உமக்கு இம்மையிலும், மறுமையிலும் புண்ணியம் கிட்டுமே" சேனாநிதிபதியின் குரலில் கேலியோ என்று திரும்பிப் பார்த்தார் மந்திரி.

லேசான தலை அசைப்பு. புரிந்த மந்திரி அவனுடன் நடந்தார். அரண்மனைக்கு சுவரெல்லாம் காது அல்லவா!

"சொல்லுங்கள்... இங்க பேசுபவை வெளியே போகாது" என்று சேனாதிபதி சொன்னதும்,

மந்திரி, " உமக்குதான் எல்லா விஷயமும் தெரிந்துள்ளதே, என்ன கேள்வி இது?'" என்று சலிப்புடன் கேட்டார் மந்திரி.

"என்னிடமும் கேட்டு உள்ளான். இவனுக்கு என்ன கோவில் கட்ட இத்துணை விருப்பம்?"

"ஹொய்சாள மன்னனின் மகளை மணந்தான் அல்லவா! அங்குள்ள கலை கோவில்களைப் பார்த்ததும் இவனுக்கும் ஆசை வந்துவிட்டது.வேறு என்ன, பொழுது போகவில்லை. இவன் பெரிய மகாராஜா போல் இல்லை. பிடிவாதகாரன், சரியான மூர்க்கன்"

"மகாராணி, அரசியிடம் சொல்லி பாருங்களேன். பொக்கிஷம் காலியாகிவிடும் என்று பயமுறுத்துங்களேன்" சேனாதிபதி குரலில் ஆதங்கம்.

தலையை அசைத்துவிட்டு புறப்பட்டார் மந்திரி.

"இந்த கிழத்தால் ஒன்றும் நடக்காது. கொள்ளை அடித்த பொருள்களை தந்துதான்ஆக வேண்டும். அடுத்த படையெடுப்பு எப்பொழுதோ?" சிந்தனையில் ஆழ்ந்தான் சேனாதிபதி.

அரண்மனையில் அதே களேபரம். ராணி, யாத்திரை முடிந்து வந்த மகாராணியிடம் கண்ணை கசக்கிக் கொண்டு நின்றாள்.

நான்கு மாதமாய் வடக்கே புனித யாத்திரியை மேற்கொண்டுவிட்டு வந்த மகாராணிக்கு ஒன்றும் புரியவில்லை.

"அவர் என்னை கவனிப்பதேயில்லையம்மா! பொழுதிற்கும் தான் கட்டப் போகும் கோவிலைப் பற்றிதான் சிந்தனை"

"தெய்வமே" என்று கிழக்கு பார்த்து கும்பிட்டவள், " நல்ல காரியம் தானே! இதற்கு ஏன் இவ்வளவு கவலை?" என்றவள்,"உன் மாமனார், அதாவது என் கணவருக்கு போரிடுவதும், மங்கையர்களுடம் களிப்பதும்தான் வேலையாய் இருந்தது.நாற்பது வயதிற்குள் அத்துணை நோயும் பற்றி இறக்கும் காலத்தில் என்னை பாடாய் படுத்திவிட்டு போய் சேர்ந்தார். அவர் தந்தையும் அப்படிதான் என்று கேள்வி பட்டுள்ளேன். என் மகனுக்கு அந்த குணம் வராமல் போனதே, என் பிராத்தனை வீண் போகவில்லை"என்றவள், "யாரங்கே! மாலை சர்வேஸ்வரன் ஆலயத்தில் லட்ச தீபம் ஏற்றுங்கள்" என்று ஆணையிட்டாள்.

அப்போது அங்கு வந்த மன்னன் தாயை வணங்கிவிட்டு, யாத்திரையைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தான். வழக்கப்படி அருகில்மந்திரியும், சேனாதிபதியும்!

மகனை ஆசிர்வதித்துவிட்டு, "மக்கள் நலமா? விளைச்சல் எப்படி?" என்று ஆரம்பித்ததும், " வருடம் முழுவதும் காவிரிஅன்னை கரைப்புரண்டு ஓடுகிறாள். விளைச்சலுக்கு என்ன குறைச்சல்?" என்றான்.

தாய் மகனிடம் கோவிலைப் பற்றிக் கேட்டதும் உற்சாகமாய் ஆரம்பித்தான் மன்னன்.

"நல்ல தொண்டு. என் பங்காய் சிற்பிகளுக்கு ஆதுர சாலை அமைக்க, முப்போகம் நெல் விளையும் நிலம் எழுதி வைக்கிறேன்" என்றாள்.

மந்திரி, " தாயே நானும், என் மனைவி மங்களமும் எங்களால் ஆன சிறு பங்காற்றலாம் என்று இருக்கின்றோம்" என்றார்.

சேனாநிதிபதி அதிர்ந்துப் போய் அவரை பார்த்தான்.

"கிழட்டு பாவி! நல்ல பெயர் வாங்கப் பார்க்கிறானே" என்று மனதினுள் திட்டிக் கொண்டே, " அரசே! என் மகன் ஸ்ரீபாலன், தன் கீழ் பணியாற்றும் ஆட்களைக் கொண்டு சிற்பிகளுக்கு வீடுஅமைத்து தருகிறேன் என்று சொல்லியுள்ளான். அதற்கு வேண்டிய நிலம் நான் தருகிறேன்" என்றான்.

மகனை முன் நிறுத்தப் பார்க்கிறாயா என்று உபதளபதி சிறிது கோபத்துடன் சேனாநிதிபதியைப் பார்க்க மந்திரியின் கண் ஜாடைஅவனுக்கு தைரியம் அளித்தது.

ராணி எல்லாம் ஈஸ்வரன் கிருபை என்று கையை கூப்பினாள். "இடம் பார்த்துவிட்டாயா மகனே?" என்று வினவினாள்.

"பழைய சிறுகோவில் ஒன்று. அதை பெரியதாய் கட்டப் போகிறேன். மங்கபுதூரில் ஒரு சிறிய கோவில், சுயம்புவாய் சர்வேஸ்வரன். விஷ்ணு சிவனை பூஜித்து பிரம்மஹத்தி தோஷத்தை நிவர்த்திக் கொண்ட இடம்" என்று ஆரம்பித்ததும், மந்திரி அதிர்ச்சி அடைந்தார்.

அக் கோவிலில் பூஜை செய்பவர், பிரம்மா தன் பிரம்மஹத்தி தோஷத்தை நிவர்த்தி செய்ய பூஜித்த தலம் என்றல்லா சொன்னார். இவன் எம்பெருமான் மகாவிஷ்ணுவை சொல்லிகிறானே என்று சேனாநிதிபதியைப் பார்த்தான்.

இவனும்தானே அன்று கூட இருந்தான் என்றுப் பார்த்தால், அவன் பார்வையோ வேறு எங்கோ கணக்கு செய்துக் கொண்டு இருந்தது.

"இப்போது ஏதாவது சொல்லப் போனால், வைஷ்ணவன் அதனால் சொல்லிகிறான் என்ற கெட்டபெயர் வரும். பெருமாளே! ஸ்ரீரங்காநாதா.. எல்லாம் உன் லீலை.." என்று மனதைத் தேற்றிக் கொண்டார்.

தாய், " கீழ்மங்கபுதூரா, மேல் மங்கபுதூரா?" என்றுக் கேட்டாள்.

மன்னன், மந்திரியை நோக்க, மந்திரி சேனாதிபதியை நோக்க, அவர் உப தளபதியை நோக்க, இப்படியாக நோக்குகள் கடைசியாய்அரண்மனை வாயிலை அடைந்ததும் ,குதிரைகள் விடை அறிய பறந்தோடின.

உபசேனாதிபதிக்கு அஸ்தியில் ஜீரமே வந்துவிட்டது. ஆறுமாதத்திற்கு முன்புதான் கீழ்மங்கலபுதூரில் நிலத்தை வளைத்துப் போட்டு நெற்பயிரிட ஆரம்பித்திருந்தார். அந்நிலத்தை தன் ஆசைகிழத்தியின் பேரில் சாசனம் வேறு செய்திருந்தார். நிலத்தை கையகப் படுத்த மன்னன் கிளம்பினால் அந்நிலம் யாருடையது என்ற கேள்வி எழுமே! தன் பெயர் வெளியானால், கட்டிய மனைவியை சமாளிக்கமுடியுமா? ஈஸ்வரா இது என்ன சோதனை? என்னை காப்பாற்று... புதிய கோவிலுக்கு என் எடைக்கு எடை பொன் தருகிறேன், தினமும் முக்காலமும் உன்னை தேடி வந்து தொழுகிறேன் என்றெல்லாம் மனதில் தோன்றியதை எல்லாம் வேண்டிக் கொண்டுஇருந்தார்.

"மேல்மங்கபுதூர்" சேனாநிதிபதியின் ஓங்கியகுரல் கேட்டதும் உபதளபதிக்கு உயிர் வந்தது.

ஜாடை காட்டி, குளிர்ந்த நீர் வரவழைத்துக்குடித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார். மாலை முதல் காரியமாய் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டவருக்கு செளகரியமாய் பழையவேண்டுதல்கள் எல்லாம் மறந்துப் போனது.

"தாயே! ஏற்பாடுகள் நடந்துக் கொண்டு இருக்கின்றன. முக்கியமாய் பொன்னையும் பொருளையும் சேகரித்துக் கொண்டு இருக்கிறேன். என் மாமனார் சிற்பிகளை அனுப்ப ஆயுத்தம் செய்துக் கொண்டு இருக்கிறார். வரும் அமாவாசைக்குள் நிலத்தை கையகப் படுத்திவிட்டு பூமி பூஜையும், ஆனைமுகத்தானுக்கு பூசையும் போட்டு விடலாம் என்று தலைமை குரு சொல்லியிருக்கிறார்"

"மிகவும் சந்தோஷம் மகனே!" என்றவள் " ஸ்தல புராணம் எழுத புலவர்களுக்கு சொன்னாயா?" என்றுக் கேட்டாள்.

"ஆம் தாயே! நம் அவை புலவர்கள் அனைவரும் ஸ்தலபுராணமும் இறைவனின் அற்புத லீலைகளையும் உருவாகிக் கொண்டு இருக்கிறார்கள். சிறப்பானதற்கு ஆயிரம் வராகன் பரிசு என்று அறிவித்துள்ளேன். ஈஸ்வரனுக்கு ஒரு பெயரும், அம்மனுக்கு ஒரு பெயரும் புதுமையாய் ஒருதமிழில் தேர்ந்தெடுங்கள் தாயே!" என்று உற்சாகமாய் தன் திட்டங்களைச் சொல்லிக் கொண்டு இருந்தான்.

மகாராணி, தான் எதிர்பார்ததைவிட ஏற்பாடுகள் மிக பெரிய அளவில் உள்ளதே, மகன் சிறிது ஆர்வகோளாறில் பொக்கிஷம் அனைத்தையும் தீர்த்துவிடுவானோ என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

ராணியோ சிறுவயதில் உல்லாசமாய் இல்லாமல் இப்படி ஒரு ஞானபழம் நமக்கு வாய்த்ததே என்று எண்ணி மனம் நொந்தாள்.

சேனாநிதிபதிக்கும், உபதளபதிக்கும் இனி சமீபத்தில் போர் எதுவும் இல்லை என்று நன்றாக புலனானது. இருக்கும் பொருளையும் கோவில் கட்ட தாரை வார்த்துவிட்டு, இனி புதியபடையெடுப்பும் இல்லாவிட்டால் எப்படி என்று அவர்கள் எண்ணம் ஓடியது.

மந்திரியோ ஸ்தலபுராணத்தில் பிரம்மா பூஜித்த ஸ்தலம் என்று எழுத முடியுமா? அதற்கு யாரை துணைக்கு அழைப்பது, எவ்வளவுசெலவாகும், ஸ்ரீரங்கம் சென்று வைணவப் பெரியவர்களிடம் விஷயத்தைச் சொல்லி நடக்க இருக்கும் அநீதீயைத் தடுக்கலாமா என்று பல் வேறு யோசனையில் ஆழ்ந்திருந்தார்.

"யாருமே கட்டாத முறையில் கட்டப்போகிறேன். மிக பெரிய கோவில், பார்ப்பவர்கள் ஆச்சரியப் படவேண்டும். ஏராளமான சிற்பிகளைக்கொண்டு என் காலத்திற்குள் கட்டி முடிக்கப் போகிறேன். யுகம் உள்ளவரையில் என் பெருமை பேசும் மிக பெரிய கோவில்" சொல்லிக் கொண்டே போன மன்னனின் கண்களில் கனவு விரிந்தது.

( முன்பு தோழியர் பதிவில் போட்டது. இப்பொழுது சில திருத்தங்களுடன் மீண்டும்)

21 பின்னூட்டங்கள்:

At Thursday, 01 March, 2007, சொல்வது...

எல்லாம் அந்த ஹொய்சாள மன்னன் மகளால் வந்த வினை...!!!

( ஹொய்சாளருடன் தமிழர்கள் திருமண பந்தம் கொண்டதாக சரித்திரமே இல்லையே உஷா அவர்களே )

 
At Thursday, 01 March, 2007, சொல்வது...

ரவி, இது அறிவியல் புனைக்கதை மாதிரி. இப்படியும் நடந்து இருக்கலாம் என்ற கற்பனை மட்டுமே! அடுத்து மேல்/கீழ் மங்கப்புதூர் எங்க இருக்கு என்று யாரும் கேட்டுடாதீங்க :-)

 
At Thursday, 01 March, 2007, சொல்வது...

நன்றாக ரசித்தேன். அருமையான கற்பனை. மிக நன்று.

// செந்தழல் ரவி said...
எல்லாம் அந்த ஹொய்சாள மன்னன் மகளால் வந்த வினை...!!!

( ஹொய்சாளருடன் தமிழர்கள் திருமண பந்தம் கொண்டதாக சரித்திரமே இல்லையே உஷா அவர்களே ) //

ரவி, கல்யாணியரோடு சோழர் திருமணத் தொடர்பு வைத்திருந்தனர். ஹொய்சாளர்களோடு பல்லவர்களுக்குத் தொடர்பு இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. சரியாகத் தெரியவில்லை. ஆனால் திருமணம் என்ற அளவிற்கு....ஐயம்தான். சந்திரவதனா இது கற்பனைக் கதை என்று சொல்லி விட்டாரே.

 
At Thursday, 01 March, 2007, சொல்வது...

நல்ல கதை சகோதரி!
நாட்டிலுள்ள பல கோவில்கள் மன்னர்களால்
கட்டப்பெற்றவையே!
கட்டியதோடு இல்லாமல் ஒவ்வொரு கோவிலுக்கும் 4, 000
முதல் 6,000 ஏக்க்ர்வரை விளை நிலங்களையும் அந்த
மன்னர்கள் கோவில்களின் நிரந்தர வருமானத்திற்காக
எழுதி வைத்திருந்தார்கள்
அந்த நிலங்களெல்லாம் குத்தகைக்கு எடுத்துப் பயிர்
செய்தவர்கள், குத்தகைப் பணத்தையும் கோவிலுக்குக் கொடுக்காமல்
நிலங்களையும் சுருட்டிக் கொண்டு போய்விட்டனர்.
பல கோவில்களில் கோவில்களின் அன்றாட செலவிற்குக்கூடப் ப்ணமில்லாமல்
திண்டாடும் நிலைமை ஆயிற்று!
இப்போது பலபகதர்கள் கை கொடுத்ததால் நிலைமை சற்றுச் சீராகியிருக்கிறது!

20 ஆண்டுகளுக்கு முன்பு, "அம்பிகையின் கண்ணீ'ர்" என்ற
நாவலை எழுதியவர் - இதை அற்புதமாகச் சொல்லியிருந்தார்
எழுதியவர் பெயர் நினைவிலில்லை - ஆனால் கதை என் மனதில் இன்றும் நிற்கிறது!

 
At Thursday, 01 March, 2007, சொல்வது...

மன்னர் காலத்திலும் ஊழலா? இதற்கு எப்போது விசாரணைக் கமிஷன் அமைக்கப் போகிறார்கள்? :-)))

கதை நன்றாக இருக்கிறது, உஷா. (அது சரி, எப்போது நீங்கள் சந்திரவதனா ஆனீர்கள்?)

இதன் தொடர்ச்சியையும் கற்பனை செய்யுங்களேன், ப்ளீஸ்.

வைசா

 
At Thursday, 01 March, 2007, சொல்வது...

விகடனிலிருந்து கல்கிக்கு படையெடுப்பா :)))

 
At Thursday, 01 March, 2007, சொல்வது...

//மன்னர் காலத்திலும் ஊழலா? இதற்கு எப்போது விசாரணைக் கமிஷன் அமைக்கப் போகிறார்கள்? :-)))///

மன்னர்காலத்தில் இல்லை!
இப்போது நம்து மக்களாட்சி காலத்திநல்தான் அந்த ஊழல்கள் எல்லாம்

 
At Thursday, 01 March, 2007, சொல்வது...

///ரவி, கல்யாணியரோடு சோழர் திருமணத் தொடர்பு வைத்திருந்தனர். ஹொய்சாளர்களோடு பல்லவர்களுக்குத் தொடர்பு இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. சரியாகத் தெரியவில்லை. ஆனால் திருமணம் என்ற அளவிற்கு....ஐயம்தான். சந்திரவதனா இது கற்பனைக் கதை என்று சொல்லி விட்டாரே.////////

யோவ் ஜீரா...என்ன உஷா மேடத்தை சந்திரவதனா என்று அழைக்கிறீர் ? மயிலார் லேண்டிங் ப்ராப்ளம் செய்து தலை கிறுகிறுக்க வைத்துவிட்டாரா ?

உஷா, கதையில் கூட ஹொய்சாளர்கள் தமிழர்களை இழுக்கமாட்டார்கள்...அவ்வளவு வெறுப்பு..ஹொய்சாளர்கள் பிரதேசம் இன்றைய கர்நாடகா இல்லையா...ஹொய்சாளர்கள் தமிழகத்தை ஆண்ட முன்னூறு ஆண்டுகள் நரகவேதனை அனுபவித்தார்கள் தமிழர்கள்...களப்பிரர் காலம் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா...

அய்யய்யோ, வாய விட்டு மாட்டிக்கிட்டீனே, உண்மையான வரலாறு தெரிஞ்சவங்க வந்து பிறாண்ட போறாங்க..

 
At Thursday, 01 March, 2007, சொல்வது...

ராகவா, அது என்ன பெயரை மாற்றிவிட்டாய்? என் பெயர் சந்திரவதனா இல்லை :-)

வைசா, சும்மா வம்புக்கு சரித்திரக்கதை என்று எழுதியது. இதில் சரித்திர சான்றுகள் எல்லாம் தேடாதீர்கள். அது சரி, அந்தக்காலத்தில் மட்டும் ஊழல் இல்லாமலா இருக்கும்? இந்தக்கதை அவ்வளவுதான், முடிஞ்சா நீங்க தொடருங்க.

வாத்தியார் ஐயா, சிவன் சொத்து குல நாசம், சாமி சொத்து தொடக்கூடாது என்று ஆயிரம் நீதி போதனை செய்தாலும், கோவில் சொத்து சூறையாட படுவது அதிசயமில்லை. கபாலீஸ்வரர் கோவில் சொத்து நிலங்கள், ஆழ்வார் பேட்டை வரை
இருந்ததாம் என்று ஒருமுறை சுஜாதா ஆவியில் எழுதியிருந்தார். இதில் விசித்திரம் என்னவென்றால் சொத்தை ஆக்ரமிப்பவர்கள் இந்துக்களே!

மணியன், அருள்வாக்குக்கு நன்றி :-)

ஐயா, அந்தக்காலத்திலும் ஊழல் இருந்திருக்கும். ஆனால் கொஞ்சம் குறைவாய்! நீதி, தண்டனை என்று மனதில் பயம் இருந்தது.கோவில் சொத்துக் கொள்ளை என்றால்
எனக்கு நினைவில் வரும் நாவல் "வெள்ளைக்காக்கைகள்" எழுதியவர் கண்ணன் ரமேஷ். முழுக்க முழுக்க கோவிலின் உள் விவகாரங்கள்.

 
At Thursday, 01 March, 2007, சொல்வது...

ரவி, களப்பிரர்கள் சமணத்தை சேர்ந்தவர்கள். சமய சடங்குகளை
நிறுத்தி கோவில்கள் நிலங்களை இல்லாதவர்களுக்கு பகிர்ந்து தந்தார்கள். அதனால் இருண்ட
காலம் என்று சொல்லப்பட்டதாம். பல நீதி நூல்கள் பல இயற்றப்பட்ட காலம் அது. . அகத்தியத்தில்
டாக்டர் ஜெயபாரதி எழுதியிருந்தார் என்று நினைக்கிறேன்.கூகுளிட்டு பார். பல புதிய விவரங்கள் கிடைக்கும்.

 
At Thursday, 01 March, 2007, சொல்வது...

// இந்தக்கதை அவ்வளவுதான், முடிஞ்சா நீங்க தொடருங்க. //

நீங்க வேற. எனக்கெல்லாம் இந்த அளவு அருமையாக எழுதத் தெரிந்தால்....

சரி விடுங்கள். :-)))

வைசா

 
At Thursday, 01 March, 2007, சொல்வது...

சரித்திரச் சான்று எல்லாம் கேட்கப் போவது இல்லை!

சந்திரவதனா என விளிக்கப் போவதில்லை. (ராகவன் உங்களை நேரில் பார்த்தாகிவிட்டதா?) :))

இறைநம்பிக்கை இல்லாத நீங்கள் இந்த மாதிரி சாமி, கோவில் என எழுதுவதால் புண்ணியம் வரும் எனப் பெரிய மனுஷத்தனம் பண்ணப் போவதில்லை. ;)

கதையைக் கதையாய் படிக்கிறேன். நல்லா இருக்கு. இவ்வளவு சின்ன பகுதியாக இல்லாமல் இன்னும் கொஞ்சம் பெரிதா இருந்தால் நன்றாக இருக்கும். அப்புறம் மன்னர், மந்திரி என இல்லாமல் பெயர்கள் தந்திருந்தால் ஞாபகத்தில் நிறுத்த எளிதாக இருக்கும்.

//மகாராஜா// எனச் சொல்லும் பொழுது 'ஜாடி' எனச் சொல்லாமல் //சாடி// எனச் சொல்வதேன்? ரொம்ப சாடறேனோ?

 
At Thursday, 01 March, 2007, சொல்வது...

பிரும்மஹத்தின்னா என்னங்க!

ஹாஸ்டல்ல இருந்த போது ஒரு அய்யராத்து நண்பன் என்னையெ திட்டும்போதெல்லாம் இந்த வார்த்தைய சோல்லிதான் திட்டுவான்.

கடேசி வரைக்கும் அர்த்தம் சொல்லவேல்ல.

நீங்களாச்சும் சொல்லுங்கோ!

 
At Thursday, 01 March, 2007, சொல்வது...

வைசா, கதைகள் எலலாரிடமும் இருக்கின்றன. எழுதி பழகுங்கள் (பிலாக் எதுக்கு இருக்கு). இது ஒன்றும் பெரிய சித்தி வித்தை இல்லை.

இலவசம், கேள்வி கேட்க போவதில்லை என்பதால் பதிலும் சொல்லப்போவதில்லை :-)))))

தம்பி, புராணங்களில் பிரம்மஹத்தி தோஷம் என்றால் பிராமணனைக் கொன்றால் உண்டாகும் பாவம் என்பார்கள். இந்த பாவம் பிரம்மஹத்தி என்ற பிசாசு ரூபத்தில் எங்க போனாலும் பின் தொடருமாம். ஆக எங்க போனாலும் தொல்லைத் தரும் பிசாசு என்று பொருள் கொள்ளலாம்.

 
At Thursday, 01 March, 2007, சொல்வது...

//இலவசம், கேள்வி கேட்க போவதில்லை என்பதால் பதிலும் சொல்லப்போவதில்லை :-)))))//

கேட்ட கேள்விக்குப் பதில் எங்க?

 
At Friday, 02 March, 2007, சொல்வது...

ஐயா இலவசம், இதோ பதில்கள்
1- இனி சரித்திர சிறுக்கதைகள் எழுதாமல், ஐந்து ஆறு பாகத்திற்கு தொடர்கதை எழுதுகிறேன். (கல்கி,
குமுதம் போன்ற பத்திரிக்கைகளில் சொந்த, பந்தம் இருந்தா சொல்லுங்க. அதெல்லாம் ரெண்டு வருஷம்
இழுத்திடலாம்? கைல நாலு காசும் தேறும் உமக்கும் பங்கு தந்துடரேன்)
2-இனி கட்டாயம் வாயிற்காப்போனில் இருந்து பெயர் வரும். நாவலை இழுக்கவும் வசதியாய்
இருக்கும். பெயர் அறிமுகம், பெயர் வைத்த காரணங்கள் இத்தியாதி இத்தியாதி....
3-இனி கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு, வடமொழி (மகாராஜா) புகாமல் பார்த்துக்
கொள்கிறேன்.
அவ்வளவுதானே கேள்விகள் :-)

 
At Friday, 02 March, 2007, சொல்வது...

கதையும்... அதவிட பின்னூட்டங்களும் ரொம்பவே சுவாரசியமா இருக்கு.

 
At Tuesday, 06 March, 2007, சொல்வது...

// செந்தழல் ரவி said...
யோவ் ஜீரா...என்ன உஷா மேடத்தை சந்திரவதனா என்று அழைக்கிறீர் ? மயிலார் லேண்டிங் ப்ராப்ளம் செய்து தலை கிறுகிறுக்க வைத்துவிட்டாரா ? //

ஐயா..மன்னிச்சுக்கிருங்கைய்யா. தெரியாமச் செஞ்சிட்டேன். இது நுனிப்புல்லுல இருக்குற கதைன்னு இப்பத்தான் தெரியுது. உஷாக்கா உஷாக்கா நீங்களும் மன்னிச்சிருங்க. சந்திரவதனா நீங்களும் என்னைய மன்னிச்சுருங்க. இன்னும் யார் கிட்டயும் மன்னிப்பு கேக்கனுங்களா! வரிசையா நின்னீங்கன்னா..அப்படியே கேட்டுருவேங்க.

// ramachandranusha said...
ராகவா, அது என்ன பெயரை மாற்றிவிட்டாய்? என் பெயர் சந்திரவதனா இல்லை :-) //

மாத்தலைங்க.....தூக்கக் கலகக்கத்துல எழுதீட்டேன். மன்னிச்சிருங்க. கதை நல்லாயிருந்துச்சா..அதுல மெய்மறந்து உங்க பெயரையும் மறந்துட்டேங்க. :-)

 
At Wednesday, 21 March, 2007, சொல்வது...

வரிக்கு வரி குத்துதே.... இம்புட்டு உள்குத்து வச்சு முன்பே (எம்புட்டு நாளுக்கு முன்னாடி?) எழுதியாச்சா?

சுஜாதாவோட குமுதம் கதையில ஆயிரம் உள்குத்தைக் கண்டுபிடிச்சவங்க யாருமே இந்தக் கதையைப் படிக்கலையா? இதுலயும் அந்த மாதிரி சொல்றதுக்கு ஒன்னு இருக்கே?! :-)

 
At Wednesday, 21 March, 2007, சொல்வது...

நன் மனம், நானே பல முறைச் சொன்னதுதானே? என் பதிவை விட வரும் கமெண்டுகள் சுவாரசியமாய் இருக்கும் என்று :-)

குமரன் எனக்கும் வருத்தம்தான் :-)))

 
At Monday, 09 July, 2007, சொல்வது...

நல்லயிருக்கே கற்பனை!
வரலாற்றை குறுக்கு விசாரணை செய்தால் பல அசிங்கங்கள் பல் இளிக்கும்!. ஆனால் இலவசம் மாதிரியான நபர்கள் வந்து நீங்கள் யாரு அதை எழுதுவதற்க்கு என்று குரல் கொடுப்பார்கள்.

 

Post a Comment

<< இல்லம்